தேசிய ரீதியில் சாதனை படைத்த நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு.......

 தேசிய ரீதியில் சாதனை படைத்த நாவற்காடு நாமகள் வித்தியாலய  மாணவர்கள் கௌரவிப்பு.......

அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற தேசியமட்ட அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மட்/மமே/ நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு மட்டக்கப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  (21) வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அந்த வகையில் தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டியில் கலந்து கொண்டு  வீணை வாசித்தல் போட்டியில்  இடைநிலைப் பிரிவில் முதலிடத்தை பெற்ற  மு.கதுர்ஷணா அவர்களையும், வீணை வாசித்தல் போட்டியில் மேற்பிரிவில் முதலாவது இடத்தினை பெற்ற சி.மாதங்கி அவர்களையும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் தேசிய மட்டத்தில் பங்குபற்றி 2வது இடத்தை பெற்ற அணியில் பங்கெடுத்த  ச.நிலுஜன் அவர்களையும்  குறித்த மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு (21) காலை ஒன்றுகூடலில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின்  ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் இந் நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர்  வை.ஜெயச்சந்திரன்  அவர்களும், வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான  பிரதிக்கல்விப் பணிப்பாளர்  ந.குகதாசன்  அவர்களும் வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களுடன், மாணவர்களை வெற்றிக்கு நெறிப்படுத்திய சங்கீதப் பாட ஆசிரியர் மதுமிதா பிரதீபன் மற்றும் உடற்கல்வி  ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் என்போரும்  பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.








Comments