பதவி உயர்வு பெற்றுச் சென்றார் சசிகலா புண்ணியமூர்த்தி...........

பதவி உயர்வு பெற்றுச் சென்றார் சசிகலா புண்ணியமூர்த்தி.............
மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய சசிகலா புண்ணியமூர்த்தி, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) ஆக பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய சசிகலா புண்ணியமூர்த்தி திட்டமிடல் சேவையின் அதி உயர் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றதையடுத்து இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
திட்டமிடல் சேவையில் 1999ஆம் ஆண்டு இணைந்து கொண்ட இவர் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக இரண்டு ஆண்டுகள் கடமையாற்றினார். இதனைத் தொடர்ந்து 2001 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில் டேபா திட்ட அலுவலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக 5 வருடங்களும், நெக்டெப் திட்டத்தின் திட்ட முகாமைத்துவ நிபுனராக 4 ½ வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண திட்டமிடல் செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக ஒரு வருடமும், பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக இரண்டு வருடங்களும், திட்டமிடல் பணிப்பாளராக 4 வருடங்களாகவும் கடமையாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் (1999–2023) அரச அபிவிருத்தித் திட்டங்களை இம்மாவட்டத்தில் அமுல்படுத்துவதில் இவர் எடுத்துக் கொண்ட கரிசனையினை பொதுமக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திட்டமிடல் துறையில் உயர்பதவி வகிக்கும் முதல் பெண் அரச உத்தியோகத்தர் சசிகலா புண்ணியமூர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments