மட்டக்களப்பில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
2014/2015 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளைச் செயற்படுத்தலின் கீழ் வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள மோட்டர் சைக்கிள், ஸ்கூட்டர் போன்றவற்றை 05 ஆண்டுகளின் பின்னர் உரிமை மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட வரவு செலவு திட்ட முன்மொழிவுகளைச் செயற்படுத்துவதன் கீழ் 05 வருடங்கள் கடந்ததன் பின்னர் நிபந்தனைகளை நீக்கி முழு உரித்தினை உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்கான நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் (21) திகதி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நடமாடும் சேவையில் மோட்டர் போக்குவரத்து திணைக்களத்தினால் பின்வரும் சேவைகள் வழங்கப்படவுள்ளன.
2014/2015 அரச சேவையாளர்களது மோட்டார் சைக்கிள்களது நிபந்தனைகளை நீக்கி உரிய உத்தியோகத்தர்களுக்கு வழங்குதல்.
ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் தமது கோவைகளை நடமாடும் சேவைக்கு கொண்டு வருவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்வதற்காக தங்களது அலுவலகத்தில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களது மோட்டார் சைக்கிள்களது நிபந்தனைகளை நீக்குவதற்குரிய கோவைகளை காலக்கிரமத்தில் இரு உத்தியோகத்தர்களின் மூலம் சேகரித்துக்கொள்வதற்கும், அத்துடன் அதற்குரிய கட்டணங்களை சேகரித்துக்கொள்வதற்கும் (மாவட்ட செயலாளர் பொது வைப்புக்கணக்கிற்கு வைப்புச் செய்தல் ஊடாகவோ அல்லது காசாகவோ) நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் தங்களின் கீழுள்ள உப அலுவலகங்களுக்கும் இவ்விடயம் தொடர்பில் அறியத்தருமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ் விடயம் தொடர்பாக உப அலுவலகங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் தங்களது அலுவலகத்தில் சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஒரு உத்தியோகத்தர் மூலம் 2023.10.12ம் திகதி மு.ப.9.00 மணிக்கு அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதன் போது குறித்த கோவைகளுடன் அதற்காக செலுத்த வேண்டிய பணத்தை (மாவட்ட செயலாளர் பொது வைப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட) காசோலை ஒன்றின் மூலம் “மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்” பெயரில் செலுத்த முடிவதோடு தேவைப்படின் காசாகவும் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. காசோலை மூலமோ அல்லது பணமாகவோ கொடுப்பனவு செய்தவர்களது பெயர், வாகன இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பற்றுச்சீட்டு இலக்கம் உள்ளடங்கிய பொதுப்பட்டியல் ஒன்றையும் தயாரித்து வருகை தரும் உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறும் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னைய வருடங்களில் விண்ணப்பித்து இதுவரை தீர்க்கப்படாது உள்ள விண்ணப்பங்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு, பதிவுச் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளல், வாகனங்களை பரிசீலித்து நிறைச்சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றிதழ் வழங்குதல்.
வாகனத்திற்குரிய உரிமையாளர் உரிய ஆவணங்களுடன் சமூகமளிக்க வேண்டும். நிறைச் சான்றிதழ் பெறவேண்டுமாயின் வாகனத்தினை நிறுத்து நிறையினை உறுதிப்படுத்தப்பட்ட கடிதம், சகல வாகனங்களுக்கான உரிமை மாற்றல் விண்ணப்பங்களை பொறுப்பேற்றல்.
எழுத, வாசிக்க தெரியாத தேர்ச்சி குறைந்த நபர்களுக்காக வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு விசேட பரீட்சையொன்று நடாத்துதல்.
ஒரு தடவையேனும் எழுத்துப்பரீட்சையில் தோற்றியிருக்கவேண்டும்.
உரிய கிராம சேவை அலுவலரிடம் எழுத வாசிக்க முடியாது என உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்.
வீதிப்பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை நடாத்துதல்.
நீண்டகாலமாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாத, ஆவணங்களில் குறைபாடுகளுடன்கூடிய வாகனங்களுக்காக மீண்டும் வருமான அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்வதற்கு சிபாரிசுக்கடிதங்கள் வழங்குதல்.
சிலிண்டர் கொள்ளளவு 50ற்கும் குறைந்த மோட்டார் சைக்கிள்களை (மோபேட்) பதிவு செய்தல்.
2010.08.31ம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட “மோபேட்” மோட்டார் சைக்கிள்களை (50 CCக்கு குறைந்த) பதிவு செய்வதாயின் பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
சமாதான நீதவான் ஒருவரினால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசி (உரிய மாதிரிப்படிவத்தினை மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பெற்றுக்கொள்ளலாம்)
உரிய பகுதிக்குரிய கிராம சேவகரினால் குறித்த “மோபேட்” மோட்டார் சைக்கிளினை உரியவர் குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னராகவே பாவித்துக்கொண்டிருக்கும் உரிமையாளர் என்பதனை உறுதிப்படுத்தும் கடிதம்.
2010.08.31ம் திகதிக்கு பின்னர் கொள்வனவு செய்யப்பட்ட (50 CCக்கு குறைந்த) மோட்டார் சைக்கிள் எனில் புதிதாக பதிவு செய்வதற்கு சமர்ப்பிக்க வேண்டிய சகல ஆவணங்களும் சமர்ப்பிக்கவேண்டும்.
சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளல்.
உரிய விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்யப்பட்டு உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
விசேட தேவையுடைய நபர்களுக்காக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குத் தேவையான வைத்திய தொழினுட்பக் குழுவின் சிபாரிசுகளை வழங்குதல் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தால் பெறப்பட்ட வைத்தியச்சான்றிதழுடன் சமூகமளிக்கவேண்டும்.
வாகனங்களின் Extract வழங்குதல்.
தெளிவற்ற செஸி மற்றும் எஞ்சின் இலக்கங்களை தேசிய ரீதியாக அச்சிடல். (மோட்டார் சைக்கிளுக்கு மட்டும்) உரிய மோட்டார் சைக்கிள் மற்றும் பதிவுப்புத்தகத்துடன் உரிமையாளர் சமூகமளித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்நடமாடும் சேவையை திறம்பட நடத்துவதற்கு தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு இத்தால் கேட்டுக்கொள்ளப்படுவதுடன், இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.
Comments
Post a Comment