சுற்றுலா தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கடற்கரை கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வெற்றிகரமாக நிறைவு!!

 சுற்றுலா தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கடற்கரை கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வெற்றிகரமாக நிறைவு.....

சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடாத்திய கடற்கரை கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (29) திகதி கல்லடி கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த கடற்கரை கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 24 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியுமாக மொத்தம் 27 அணிகள் பங்குபற்றின. இறுதிப்போட்டி, அரை இறுதிப்போட்டி, 3ம் இடத்தினைத் தெரிவு செய்யும் போட்டி உள்ளடங்களாக 27 போட்டிகள் இடம்பெற்றன. இதில் 1ம், 2ம், 3ம், 4ம் இடங்களைப் பெற்ற ஆண், பெண் இருபால் அணிகளுக்குமாக பெறுமதிமிக்க பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், அவரது 60வது பிறந்த நாள் தின நிகழ்வும் இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் கொண்டாடப்பட்டது.
சுற்றுலாத்துறை மேம்பாடு, போதையற்ற சமூகத்தை உருவாக்கல், கரையோர சுத்தம் பேணல், சுய தொழிலை முன்னேற்றுதல் (உள்ளூர் உற்பத்தியாளர்கள்) ஆகிய சமூக நல இலக்குகளை நோக்கிய பார்வையில் மட்டக்களப்பு மாவாட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் இரண்டு நாள் நிகழ்வாக இச்சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போட்டித் தொடரில் பெண்கள் அணி சார்பாக கலந்து கொண்ட பன்சேனை இளைஞர் விளையாட்டுக் கழக வீராங்கணைகள் முதலாம் இடத்தினையும், 2ம்,3ம்,4ம் இடங்களை முறையே தன்னாமுனை சென் ஜோசப் விளையாட்டுக் கழகம், அம்பளாந்துறை கதிரவன் விளையாட்டுக் கழகம், கிரான் புளுஸ்டார் விளையாட்டுக் கழகம் என்பன தட்டிக் கொண்டன.
இதேவேளை ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தினை ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகமும், 2ம் இடத்தினை இக்னேசியஸ் அணியும், 3ம், 4ம் இடங்களை லைட்ஹவுஸ் விளையட்டுக் கழகம் மற்றும் ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம் என்பன தட்டிக் கொண்டன.
இவ்வெற்றி பெற்ற அணிகளுக்கான 1ம் பரிசு 50ஆயிரம் ரூபாவும், 2ம் பரிசு 40 ஆயிரம் ரூபாவும், 3ம் பரிசு 30 ஆயிரம் ரூபாவும், 4ம் பரிசு 20 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசில்களாக வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளுக்கான பிரதான அனுசரனைகளை கனிஸ்கா கொம்போஸ் நிறுவனம், நியுசெஞ்சரி எம்.ஜே.எப். லயன்ஸ் கிளப், பெரோரா பேட்டிலைசர் நிறுவனம் என்பன வழங்கியிருந்தன.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை பீடத்தின் மேலாளர் பாரதி கெனடி, மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை அதிகாரிகள், உதைபந்தாட்ட ரசிகர்கள், பெருந்திறளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.


Comments