மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உளவளத்துணை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.....

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உளவளத்துணை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.....

சர்வதேச உளவள தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு உளநலம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு இன்று (25) திகதி செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
உலக சுகாதார நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒக்டோபர் 10 ஆம் திகதி சர்வதேச உளவள தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உளநல வைத்திய நிபுணர் மகேசன் கணேசன், மன அழுத்தம் தொடர்பாகத் தெளிவுபடுத்தியதுடன், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டல்களையும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கினார். அத்துடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் உளநலத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்தார்.
இதன் போது உளநலம் என்பது உலகளாவிய மனித உரிமை என்ற நோக்கத்திற்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் உளவளத்துணை மற்றும் உள நல சமூக சேவை செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிப்புடன் வழங்கிய அருட்தந்தை போல் சற்குணநாயகம் மற்றும் வைத்தியக் கலாநிதி மகேசன் கணேசன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உளநல வைத்திய நிபுணர் டான் சௌந்தரராஜன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பதில் உளநல வைத்திய நிபுணர் எஸ்.சிந்துஜன் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழிப்புணர்வூட்டும் நிகழ்வினை மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் யு.சுபானந்தினி மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் அ.பிரபாகர் ஆகியோர் ஒருங்கிணைப்புச் செய்திருந்ததுடன், செரி தொண்டு நிறுவனம் மற்றும் தொழில்வாண்மை ஆற்றுப்படுத்தல் நிலையம் என்பன இணைந்து இதற்கான நிதி அனுசரணையினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.







Comments