காத்தான்குடியில் சிறுவர் அபிவிருத்தி ஊக்குவிப்பு செயலமர்வு........

 காத்தான்குடியில் சிறுவர் அபிவிருத்தி ஊக்குவிப்பு செயலமர்வு........

காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான ஊக்குவித்தல் செயலமர்வு (25) திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளராக தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் (Civil) பீட விரிவுரையாளர் ஏ.எல்.றிஷாத் கலந்துகொண்டார்.
அவர் தனது விரிவுரையில், மகிழ்ச்சிகரமான குடும்பத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள் திறமையானவர்களாகவும் புதுமையானவர்களாகவும் காணப்படுகிறார்கள். கற்றலிலும், உணவுப் பழக்கங்களிலும் தற்போதைய பிள்ளைகள் புதுமையை அதிகமாக விரும்புகிறார்கள். பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளை அவர்களது விருப்பங்களுக்கு செயற்பட விட வேண்டும். அவர்களை வளர்க்க வேண்டுமே தவிர மேய்க்க கூடாது.
நாம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். நாம் செய்யும் நற்செயல்களைப் பார்த்து அவர்கள் பழகிக் கொள்வார்கள். வாசிப்பு பழக்கம், விளையாட்டு, ஆடல் , பாடல் போன்றவற்றை அவர்களுடன் சேர்ந்து செய்து அவர்களை பாராட்ட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் நாம் குழந்தைகளுடன் நன்றாக பேச வேண்டும், அவர்களது கதைகளை பொறுமையாக கேட்டுக் கொண்டு அவர்களது கேள்விகளுக்கு அவர்களுக்கு புரியும்படி பதில் கூறவேண்டும், ஒரு நாள் 24 மணித்தியாலத்தை மூன்று எட்டாகப் பிரித்து முதல் எட்டு மணித்தியாலத்தையும் வழமையான வேலைக்காகவும் அடுத்து எட்டு மணித்தியாலத்தை ஓய்வு, தூக்கத்திற்கும் இறுதி எட்டு மணித்தியாலத்தை குடும்பம், நல்ல நண்பர்கள், கடவுள் நம்பிக்கை, சுகாதாரம், பொழுதுபோக்கு, சந்தோசம், சேவைகள், சிரிப்பு போன்றவற்றுக்காக கழித்தால் மகிழ்ச்சியான வாழ்வை பெறலாம் எனவும் மிகவும் பிள்ளைகளின் வளர்ப்பு முறை தொடர்பான தெளிவுபடுத்தல்களை வளவாளர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments