மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சரஸ்வதிப் பூஜை நிகழ்வு......

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சரஸ்வதிப் பூஜை நிகழ்வு......

நவராத்திரியின் முதல் நாள் கொலு வைத்தல் பூசை நிகழ்வுகள் (15) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.
சரஸ்வதிப்பூஜையின் முதல் நாள் நிகழ்வுகள் (15) திகதி காலை மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வர குருக்கள் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
சித்தி விநாயகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, கொலு வைக்கப்பட்டு மூலமூர்த்திக்கும், நவராத்திரி கும்பத்திற்கும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, சகல கலா வள்ளி பாமாலை பாடப்பட்டதனைத் தொடர்ந்து, அடியார்களுக்கு பிரசாதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
முதல் நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் முதல் மூன்று நாட்களில் துர்க்கையையும், அடுத்த மூன்று தினங்களில் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியையும் வணங்குவது வழக்கம். நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதிக்கு உரிய மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் நாளில் சரஸ்வதி தேவி தோன்றுகிறாள் என்பது ஐதீகம்.
எதற்குமே ஒரு மூலம் உண்டு என்பதை உணர்த்தும் விதமாகவே கலைமகள் மூல நட்சத்திரத்தில் அவதரித்தாள் என்பர். ஞானம், கல்வி, இவை மட்டுமின்றி, ஆயுள், ஆரோக்யமும் கூட சரஸ்வதியின் கடாட்சத்தால் கிட்டும் என்கிறது பவிஷ்யோத்ர புராணம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பூஜை, விரதம் இவற்றை அனுஷ்டிக்க வேண்டும் என்றும், இயலாதவர்கள் அஷ்டமி திதி வரும் நாளில் மட்டுமாவது அவசியம் விரதம் இருக்க வேண்டும் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை விஜயதசமி தினத்தில், அம்பிகை வெற்றி வாகை சூடினாள். ஆணவம், சக்தியாலும்; வறுமை, செல்வத்தினாலும்; அறியாமை, ஞானத்தாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதும், அன்றைய தினம் மிகவும் சிறப்புமிக்க தினமாகவும் புதிதாகத் தொடங்கும் எந்தக் கலையும் எளிதாக வசமாகும் என்பது நம்பிக்கையாகவும் நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளாகவும் இது திகழ்கின்றது.
இன்றைய முதல்நாள் பூஜையினை மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் பிரிவு, ஊடகப்பிரிவு மற்றும் பல நோக்கு அபிவிருத்தி செயலணி பிரிவு என்பன இணைந்து மிக சிறப்பாக நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments