வாகரையில் புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட குளங்கள் விவசாயிகளிடம் ஒப்படைப்பு....
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் தூர்ந்துபோயுள்ள குளங்களை நீர்ப்பாசனம் செய்யக்கூடிய வகையில் புனரமைப்புச் செய்து, அவற்றை பிரதேச விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் கடந்த (12) இடம்பெற்றன.
'எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் - பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்துக்கு அமைவாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திக்கனைக்குளம், மாணிக்கம் குளம், பனிச்சங்கேணிக் குளம் ஆகிய மூன்று குளங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
'பெண்கள், சிறுவர்கள் உட்பட 1,772 வறுமைக்குட்பட்ட குடும்பங்களை நேரடி இலக்காகவும் 2043 குடும்பங்களை மறைமுக இலக்காகவும் கொண்டு நன்மை பெறும் வகையில் அவர்களது மேம்பட்ட வாழ்க்கையை உறுதி செய்வது இத்திட்டத்தின் இலக்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பிரதேசத்திலுள்ள 1000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதும் இதன் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குளங்களில் தேக்கப்படும் நீர் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வாண்டின் பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகளால் நீர்ப்பாசனத்துக்குப் பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிகாமணி மயூரன், 'எல்லா அபிவிருத்தித் திட்டங்களை விடவும் குளங்களை புனரமைப்புச் செய்தல் என்பது அதிக சிரத்தை எடுத்துச் செய்ய வேண்டியதாகும். இப்பிரதேச விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை செய்து முடிக்கக்கூடியதாக இருந்தது.
அத்தோடு பெண்கள் அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, வாழ்வாதாரம், மனைப் பொருளாதார தொழில் உற்பத்தித் திறன்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டத்துக்காக மேலும் 21 மில்லியன் ரூபாய் செலவில் வாகரையில் அபிவிருத்தித் திட்டங்கள் அமுலாகிறது' என்றார்.
புனரமைப்புச் செய்யப்பட்ட குளங்களை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கொகாகோலா பவுண்டேஷன் அமைப்பின் இலங்கை மாலைதீவு நாடுகளுக்கான பிராந்திய இணைப்பாளர் லக்ஷான் மதுரசிங்ஹ, சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிகாமணி மயூரன், வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன், விவசாய, நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் அலுவலர்கள் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment