மதுரங்குளி ATM கொள்ளை: சந்தேகநபர்கள் மூவரும் கைது...

 மதுரங்குளி ATM கொள்ளை: சந்தேகநபர்கள் மூவரும் கைது...

கைதானவர்களில் இருவர் ATM பணம் மீள்நிரப்பல் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள்: 1 கோடிக்கும் அதிக பணத்தில் 9,277,000 மீட்பு.

கடந்த ஒக்டோபர் 08ஆம் திகதி மதுரங்குளி 10ஆம் கட்டை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தில்  1 கோடி 5 இலட்சத்து 49 ஆயிரம் பணத்தை (10,549,000) கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ATM இயந்திரத்தை சரிசெய்ய வந்த பணியாளர்கள் போல் நடித்து, அதன் பின்பக்க கதவை திறந்து, இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

(17) காலை அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் பிரிவுக்கு பொறுப்பான குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் குறித்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகங்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய அவர்களிடமிருந்து  9,277,000 பணமும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 32, 35 வயதுடைய கல்கமுவ, வெரெல்லகம, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேகநபர்களில் இருவர் ATM இயந்திரங்களுக்கு பணம் வைப்பிடுதல் மற்றும் பணத்தை கொண்டு வருதல் ஆகிய பணிகளைச் செய்யும் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் இருவர் என்பதோடு மற்றைய நபர் வாகன மின் சுற்று தொழில்நுட்பவியலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களால் குற்றத்தை புரிவதற்கு பயன்படுத்திய உடைகள், பாதுகாப்பு முகமூடிகள், பாதுகாப்பு கெமராக்களுக்கு பூச்சுவீசுவதற்கு பயன்படுத்திய நிறப்பூச்சு விசிறி ரின்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் ஆகியன மேலதிக விசாரணைகளுக்காக மதுரங்குளி பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மதுரங்குளி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தின் பின்புலம்:

சம்பவம் இடம்பெற்ற போது, மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கருகிலுள்ள தனியார் ATM இயந்திரத்துக்கு மோட்டார் சைக்கிளில் மூவர் முகங்களை மறைத்து மிகவும் சாதாரணமாக வருகை தந்தமை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியிருந்தது.

அங்கு வருகை தந்த கொள்ளையர், ATM இயந்திரம் பழுது என்றும் அதனை திருத்தப்போவதாகவும் கூறி, எவ்விதமான பதற்றமுமின்றி, திறப்பு ஒன்றின் மூலம் ATM இயந்திரத்தின் பின் கதவைத் திறந்து பணம் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்குள்ளே சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனையடுத்து, இரகசிய இலக்கங்களை உட் செலுத்தி ATM இயந்திரத்தை திறந்த கொள்ளையர்கள் அந்த இயந்திரத்தில் இருந்த சுமார் ஒரு கோடிக்கு அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இந்த துணிகரமான கொள்ளைச் சம்பவத்தில் ATM இயந்திரத்திரத்திற்கோ அல்லது பாதுகாப்பு அறையின் கதவுக்கோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ATM இயந்திரம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கள் இடம்பெற்றிருந்த வேளையிலேயே, கொள்ளையர்கள் இந்த துணிகர சம்பவத்தை நடத்தியிருநந்தனர்.

தனியார் வங்கியுடன் தொடர்புடைய ஒரு சிலரின் உதவியுடன் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென தாம் சந்தேகிப்பதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Comments