எம்மை விட்டுமறைந்தாலும், இன்றும் எம்முடன் வாழும் 'பாதர் ஹேபியர்' இன்று அவருக்கு 100 வயது....

 எம்மை விட்டுமறைந்தாலும், இன்றும் எம்முடன் வாழும் 'பாதர் ஹேபியர்' இன்று அவருக்கு 100 வயது.... 

கிழக்கு மாகாணத்திற்கு என தன்னை முழுமையாக அர்பணித்த ஒரு அருட்தந்தை தான் பாதர் ஹேபியர் என மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அருட்தந்தை யூஜின் ஜோன் ஹேர்பட் அடிகளார் ஆவார். 

பிறப்பும் குருத்துவமும்:

இவர் 1923 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ம் திகதி லூசியானா ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஜென்னிங்ஸில் பிறந்தார். இறைபணியில் ஆர்வம் கொண்டு இறைவனுக்காக மக்கள் பணி செய்து தன் வாழ்வை அர்பணிக்க விரும்பி 1941 ஆகஸ்ட் 14ல் தனது 17வது வயதில் இயேசு சபையில் இணைந்து கொண்டார். இயேசு சபையில் குருத்துவ படிப்பை தொடர்ந்த  இவர் குருத்துவத்தின் ஒரு கட்டத்தின் பணி செய்ய  இலங்கை இயேசு சபைக்கு செல்லுமாறு பணிக்கப்படுகின்றார். இதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு இலங்கைக்கு பயணமானார்.

இலங்கைக்கான முதல் பயணம்:

 முதல் தடவையாக இலங்கைக்கு வரும் அவருக்கு, தான் எங்கு பணியாற்றப்போகின்றேன், அது எப்படி இருக்கும், என தெரியாத இளம் வயதில் இலங்கையை 1948 ஆம் ஆண்டு செப்டம்பரில் வந்தடைந்தார்.  இவரின் முதல் பணிக்காக இவர் அனுப்பபட்ட இடம் தான் மட்டக்களப்பு,  அப்போது கூட அவர் அறிய வில்லை, தான் இங்கு  ஒரு புரட்சியையே செய்யப்போகின்றேன் என்று தெரியாமல் மட்டக்களப்பில் தன் முதல் பணியை  கல்லடி புனித செபஸ்தியன் அனாதை இல்லத்தில் சேர்ந்து பணியாற்றுகின்றார்.  பணியை செய்து கொண்டிருக்கும் போது  இவருக்கு மற்றுமொரு ஒரு செய்தி கிட்டியது மட்டக்களப்பில் தங்கள் சேவை போதும், கிழக்கு மாகாணத்தில் மற்றுமொரு நகரான இருக்கும் திருகோணமலைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டார்.

ஒரு வருடம் மட்டக்களப்பில் பணியாற்றி உடனடியாக திருகோணமலை புறப்பட்டார். அங்கு இயேசுசபை  கல்லூரிகளில் பணியாற்றியனார். அப்போது தான் மற்றுமொரு செய்தி அவர் காதுகளில் சொல்லப்பட்டது, தங்கள் குருத்துவ பணியை முழுமையாக முடித்துக் கொள்ளவும், இறையியல் கல்வியை கற்பதற்காகவும் இந்தியாவின் பூனா நகருக்கு செல்லுமாறு கூறப்பட்டது. ஒரு வருடம் மட்டக்களப்பு, இன்னுமொரு வருடம் திருகோணமலை ஆகிய இடங்களில் பணியாற்றி இந்தியா செல்கின்றார். அங்கு படிப்புக்களை முடித்துக் கொண்டு, 1954 மார்ச் 24ம் திகதி குருவாக திருநிலைபடுத்தப்படுகின்றார். 

இலங்கைக்கான இரண்டாம் பயணமும் திருமலை ஜோசப் கல்லூரியும்:

1954ல் குருத்துவத்தை பெற்று ஒரு அருட்தந்தையாக  1956 ஏப்ரலில் தன் உயிர் இலங்கை மண்ணிலே தான் பறிக்கப்படப்போகின்றது என்பதை அறியாத ஆட்டுக்குட்டி போல் மீண்டும்  இலங்கைக்கு வருகின்றார். வந்ததும் திருகோணமலையில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராக பணியாற்றுமாறு பணிக்கப்பட்டார். விஞ்ஞான பட்டதாரியான இவர் கடமையாற்றிய காலத்திலே தான் இப்பாடசாலையில்  உயர் தரத்தில் விஞ்ஞான பிரிவு கொண்டு வரப்பட்டது. இதன் பின் தனது வித்தையான விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்தி பல சாதனை வீரர்களை அப்பாடசாலையில் இனங்காணச் செய்தார். 1963ல் மட்டக்களப்பில் நடைபெற்ற கூடைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியை அழைத்து வந்திருந்தார் அருட்தந்தை, இதனைத்தொடர்ந்து  1965ல் மொரட்டுவையில் நடைபெற்ற போட்டியில் தனது மாணாக்கர்களை சரியாக துள்ளியமாக பயன்படுத்தி வெற்றியை சுவைத்தார் அருட்தந்தையர். இதன் பின் இப்பாடசாலையின் அதிபராகவும் சிறிது காலம் பணியாற்றி  1970ல் அங்கிருந்து விடைபெற்று மட்டக்களப்பை வந்தடைகின்றார்.

Eastern Technical Institute (ETI) மட்டக்களப்பில்  ஸ்தாபிப்பு:

 1960 களில் கத்தோலிக்க பாடசாலைகள் உட்பட தனியார் பாடசாலைகள் அரசால் கையகப்படுத்தப்பட்டன, இதன் காரணத்தால் இவரின் பாடசாலைகளுக்கான செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட  கிழக்கிலே ஒரு புதிய தொழில் நுட்ப கல்லூரியை  ஏற்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மட்டக்களப்பு வந்ததும் கிழக்கு தொழில்நுட்ப நிறுவனம் (ETI) எனும் தொழில் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு    புனித மைக்கேல் கல்லூரியிலும் பணியாற்றினார். 

புனித மிக்கல் கல்லூரியில் கால்பதித்தல்:

1970 தொடக்கம் 1990 வரை பாதர் ஹெபியரின்   கூடைப்பந்தின் அட்டகாசம் புனித மிக்கல் கல்லூரியில்  ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இலங்கையில் எந்த பாடசாலைகளும் புனித மிக்கல் கல்லூரியை வீழ்த்த முடியாது எனும் புதிய சரித்திரத்தை பதித்தவராக திகழ்ந்தார். தம் முதல் முயற்சியாக 1970களில் புனித மிக்கல் கல்லூரியை வந்தடைந்நது 13 தொடக்கம் 19 வயதினருக்கான பயிற்சியை தொடங்கி அதற்காக தன் நேரங்களை செலவு செய்தார். இதன் பயணாக 1986, 1987 மற்றும் 1988ம் ஆண்டுகளில் கூடைபந்தாட்டத்தில்  புனித மிக்கல் கல்லூரி இலங்கையின் சாதனை படைத்து சம்பியனாக திகழ்ந்தது,  இதை யாராலும் அசைக்க முடியாததாகவும் இருந்தது.

இவரைப்பற்றி பலரும் பல விடயங்களை பதிவிட்டுள்ளனர்:

 இவர் ஒரு சமயம் கொழும்பிற்கு கூடைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சியளிக்க வந்த போது குறிப்பிட்டாராம், ஒரு கூடைபந்தாட்ட வீரன் வலது கை காரனா அல்லது இடது கை காரனா என அவர் மனைவிக்கு கூட தெரியாமல் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவர் தான், முதன் முதலில் இலங்கைக்கு அமெரிக்காவில் இருந்து மின்னனு புள்ளிக்கணிப்பு பலகையை கொண்டு வந்ததாகவும், புனித மிக்கல் கல்லூரி மாணவர் பயிற்சி பெறுவதற்றாக அமெரிக்காவில் உள்ள தம் நண்பர்கள், உறவினர்களிடம் பந்துகளை கொள்வனவு செய்து வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிற்கு மாணவர்களை அழைத்து வரும் போது, கொட்டாஞ்சேனை புனித பெனடிக் மைதானத்தில் அவர் தங்குவார், அவரை வீடுகளில் தங்க அழைத்தால் நான் பிள்ளைகளுடன் இருக்க ஆசைப்படுகின்றேன் என்னை விடுங்கள் என்பாரம் அப்படிப்பட்ட ஒரு எளிமையானவர் தான் அவர்.

கடைசி கடிதம்:

கடைசியாக ஒரு கடிதத்தை தன்னுடன் பணியாற்றும் இயேசு சபை துறவிக்கு எழுதி இருந்தார். இது தான் தனது கடைசி கடிதம் என அறியாமல் தம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உதவி கேட்டு இன்னும் இன்னும் தம் பணியை வழங்குவதற்காக எழுதி இருந்தார். அதில் அவர் பல விடயங்களை சுட்டி காட்டி இருந்தார். அதில் ஒரு பகுதி.....

எங்களுக்கு சோதனைகள் போதும், கர்த்தர் எம்மை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். நான் என் தொழில் நுட்ப கல்லூரி   இளைஞர்களுக்கு மறுவாழ்வு படிப்புகளை நடத்தி வருகிறேன், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 20 சிறுவர்களுக்கு வெல்டிங் பயிற்சியும், 20 பேருக்கு குளிர்சாதனம் பழுது பார்க்கும் பயிற்சியும்,  25 பேருக்கு வீட்டு மின் இணைப்பு பயிற்சி அளிக்கிறோம். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நாங்கள் 15 பேருக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி பழுதுபார்க்கும் பயிற்சி அளிக்கிறோம். இது எங்களின் வழக்கமான மூன்று வருட பொது பயிற்சி படிப்புக்கு கூடுதலாக உருவாக்கவுள்ளோம். இங்கு பல சிக்கல்களில் இளைஞர்கள் சிக்குண்டு வாழ்கின்றார், அவர்களுக்கு கைகொடுக்கவே நான் இங்கு  பணிசெய்கின்றேன் எனவே 'எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்' என எழுதி இருந்தார்.

எனவே கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கூடைபந்தாட்டம் மற்றும் வாய்ப்பில்லாத இளைஞர்களை ஒன்று திரட்டி பயிற்சி கல்லூரியை ஆரம்பித்து, அப்போதிருந்த பிரச்சனையாக கால கட்டத்தில் இளைஞர்களுக்கு பாதுகாப்பளிக்கும்  ஓர்  உத்தமராக வாழ்ந்தார். இவரின் கண்டு பிடிப்புக்கள் (நான் பொருட்களை சொல்லவில்லை) மனிதர்களை சொல்கின்றேன் உலக அளவில் தங்கள் வாழ்வை இன்றும் சிறப்பித்து வாழ்பவராகவும், இலங்கையில் பல வங்கிகளில், இராணுவத்தில், விமான படைகளில் பணி செய்து  வாழ்வை நடாத்தி வருகின்றனர். மட்டக்களப்பின் ஒரு புதுமை படைப்பாளி என்றால் அது அடிகளார் தான். ETI அமைப்பால் செய்யப்பட்ட கண்டு பிடிப்புக்கள் அளவிட முடியாதவை ஆச்சரியப்பட வைத்தவையாகும்.

இறுதிப்பயணம்:

1990 ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி மட்டக்களப்பை ஓர் இருள் சூலும் நாளாக தான் அன்றைய விடியற்பொழுது இருந்திருக்கும் என நினைக்கின்றேன். மீண்டும் 1990 ஜூன் மாதம் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது ஆங்காங்கே சிற் சில வன்முறை சம்பவங்கள் நடந்தேறிய வண்ணம் இருந்தன. இதன் ஒரு சம்பவமாக வாழைச்சேனை பகுதியில் ஆகஸ்ட் மாதம் 13ம் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அதில் பல பொது மக்கள், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள்  இவ்விடத்தில் சிக்குண்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற அவர்களின் நிலையினை அறிந்து அதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு அடிகளாருக்கு பணிக்கப்பட, அடிகளாரும்  வாழைச்சேனை செல்கின்றார்.

மட்டக்களப்பு சமாதானக் குழுவின் முக்கிய அங்கத்தவரான இவர், அங்கு  உரியவர்களிடம் கதைத்து ஒரு நல்ல விடயமாக எல்லோரையும் பாதுகாப்பாக 16ம் திகதி அன்று, காலையில் அவர்களை ஒரு பாதுகாப்புத் தொடரணி ஊடாக பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பும் போது வாகனத் தொடரணியுடன், அவரையும் வருமாறு ஆயர் அவர்கள் பாதர் ஹெபயரிடம் தெரிவித்துள்ளார்.  இதற்கு பாதர் ஆயரிடம் தெரிவித்தார்  நிலைமை சீராகி வருவதால், எனது ETI நிறுவனத்தில் கவனிக்க வேண்டிய பல அவசர விடயங்கள் இருப்பதால் தான் பிரதான வீதியூடாக அல்லாமல்  உள் வீதியூடாக நான்  15ம் திகதி மாலையில் புறப்படுகின்றேன் என்று கூறியுள்ளார்.

முடிவு கிடைக்கப்பெறாத இரவு:

 எப்போதும் மக்களுக்கு பணியாற்ற விரும்பும் பாதர் ஹெபியர் தன் மாணவனான 'பேட்ரம் பிரான்சிசையும் அழைத்துக் கொண்டு தம் சிவப்பு நிற வெஸ்பா ஸ்கூட்டரில் வாழைச்சேனையில் இருந்த புறப்பட்டுள்ளார், மாலை நேரமாகியதால் தான் ஆயரிடம் கூறியவாறு உள் வீதியின் ஊடாக வந்து கொண்டிருக்கின்றார். வீதிகளில் எங்கும் ஒரே பதற்றம் பரபரப்பு இவரை வீதியில் கண்ட சிலர், பிரச்சனையாகவுள்ளது இப்ப போக வேண்டாம் என  பலரும் இடைநடுவில் கூறுகின்றார்கள், இருந்த போதிலும் தனக்கு யாரும் எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள் நான் மக்களை  காப்பாற்றியுள்ளேன் அவர்கள் பாதுகாப்பாக நாளை அங்கு வந்து சேர்வார்கள்  அவர்களை காப்பாற்ற என்னை அழைத்தார் ஆன்டவர் எனக்கூறி புறப்பட்ப்பட்டார்.

மாணவரையும் தன் ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு வருகின்றார், இருள் சூழ்ந்து கொண்டிருந்தது, தான் பாதிரியார் என்பதால் தனக்கு யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் தன் மாணவனுக்கும் ஒன்றும் நடக்காது என எண்ணிவாறு ஸ்கூட்டரை செலுத்திய வண்ணம் இருந்துள்ளார். தம் மாணவருக்கும் என்ன நடக்கப்போகின்றது என அறியாமல், அணைவருக்கும் கைகளை அசைத்தபடி தன் கசக்கை தூக்கி கட்டியபடி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கின்றார். நேரம் மாலை 6மணியை தாண்டுகின்றது பாதர் வந்து விட்டாரா என கேள்வி மட்டக்களப்பில் பலரிடமும் கேட்கப்படுகின்றது. அவர் வந்து விடுவார் அவரை இடையில் கண்டதாக பலர் கூறியதாக கூற, நேரம் 07 தாண்டி எட்டை தொட்டது அனைவரது மனதிலும் ஒரு பயம் கௌவிக்கொண்டது.  தொலைபேசிகள் ஆங்காங்கே ஒலி எழுப்ப பாதரின் ஸ்கூட்டர் சத்தம் மட்டும் எங்கும் கேட்கவில்லை.

நள்ளிரவு தாண்டியது 16ம் திகதி விடிந்து விட்டது பாதர் 15ம் திகதி மாலை அங்கிருந்து புறப்பட்டதாக வாழைச்சேனையில் இருந்து கூறப்பட்டது. திட்டமிட்டது போல் அங்கிருந்து பொது மக்கள் பாதுகாப்பாக மட்டக்களப்பை 16ம் திகதி வந்தடைந்து இருந்தனர், ஆனால் அவர்களை மீட்கச்சென்ற பாதரை மட்டும் காணவில்லை. வாகனத்தில் பத்திரமாக வந்து சேர்ந்த மக்கள் பாதரை காணவில்லை என ஓவென அழுத்தொடங்கினர், அன்றைய தினம் பொழுது பட்டும் கூட இன்று வரை அந்த வெள்ளை மனங்கொண்ட வெள்ளக்கார சாமியை இன்று வரை எம்மால் காணவே முடியவில்லை.

ஹெபியர் என்டா நம் கண் முன்னே வருவது கருப்புநிற  கடினமான சப்பாத்து, கொலர் இல்லாத வெள்ளை கோட்டன் டி ஷர்ட், குட்டையாக வெட்டப்பட்ட 'க்ரூ-கட்' தலைமுடி ஸ்டைல், வேகமான வேக நடை மற்றும் அன்பான சிரிப்பு இன்றும் அவர் வருவார் என நம்பாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அவரது 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல இனையதளங்கள், முகநூல்களில் தேடி என்னால் வெளியிடப்பட்ட பதிவு இது முக்கியமாக இப்பதிவுகளுக்கு உனக்கு பெரு உதவி செய்த Tommy Ganeshamoorthy அண்ணனுக்கு மனமார்ந்த நான்றிகள்.

  • என்றும் அன்புடன், 
  • பாலசிங்கம் ஜெயதாஸன்
திருமலை ஜோசப் கல்லூரி
திருமலை ஜோசப் கல்லூரி
புனித மிக்கல் கல்லூரி
புனித மிக்கல் கல்லூரி


Comments