வெள்ளி விழா காணும் Re.Fr.ஸ்டனியை கௌரவிக்கும் வாகரை நல் உள்ளங்கள்......

 வெள்ளி விழா காணும் Re.Fr.ஸ்டனியை கௌரவிக்கும் வாகரை நல் உள்ளங்கள்......

 குருத்தவ பணியில் 25வது வருடத்தை நினைவு கூறும் வாகரை பங்கின் மைந்தனான அருட்தந்தை மரியான்தம்பி ஸ்டனிஸ்லாஸ் அடிகளாளாரை வாகரை பங்குச்சமூகம், மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்

றும் இடம்பெயர்ந்தோர் ஒன்றினைந்து கௌரவிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வானது எதிர்வரும் 09.09.2023 அன்று வாகரை புனித இராயப்பர் ஆலயத்தில் காலை 9 மணிக்கு திருப்பலியுடன் நடைபெறவுள்ளது. 

அவரைப்பற்றிய ஒரு சிறு தொகுப்பு.....

வாகரையைச்‌ சேர்ந்த பொன்னையா,நாகம்மா தம்பதியினரின்‌ ஏக புதல்வனான மரியான்தம்பிக்கும்‌, மட்டக்களப்பு கல்லடியைச்‌ சேர்ந்த தம்பதியினரின்‌ மகனான நாகரட்ணத்திற்கும்‌ (இருதயமேரி) மகனாக 1972.01.10இல்‌ மட்டக்களப்பு மாவட்டத்தின்‌ வாகரையில்‌ ஸ்ரனிஸ்லாஸ்‌ அடிகள்‌ பிறந்தார்‌. 

ஐந்து ஆண்‌ சகோதரர்களையும்‌,மூன்று சகோதரிகளையும்‌ கொண்ட குடும்பத்தில்‌ ஏழாவது பிள்ளையாகப்‌ பிறந்த இவர்‌, தனது ஆரம்பக்‌ கல்வியை 1977 தொடக்கம்‌ 1983 வரை மட்/வாகரை மகா வித்தியாலயத்தில்‌ கற்றார்‌. பின்னர்‌ 1983இல்‌ மட்/ புனித மிக்கேல்‌ கல்லூரியில்‌ இணைந்து கல்விகற்றார்‌.

1987இல்‌ குருத்துவ அழைத்தலை ஏற்று மட்டக்களப்பு புனித வளனார்‌ குருமடத்தில்‌ இணைந்துகொண்டார்‌. அக்காலகட்டத்தில்‌ வாகரை புனித இராயப்பர்‌ ஆலயப்‌ பங்கில்‌ பணியாற்றிய அருட்தந்தை கிங்ஸ்லி ரொபட்‌ அடிகள்‌ இவரை குருமடத்திற்கு அனுப்புவதிலும்‌, குருவாக உருவாக்குவதிலும்‌ ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார்‌ என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 1990 வரை சிறிய குருமடத்தில்‌ பயின்றதன்‌ பின்னர்‌ 1991இல்‌ கண்டி பெரிய குருமடத்திற்குச்‌ சென்று குருத்துவக்‌ கல்வியைக்‌ கற்றுத்‌ தேறினார்‌.

1998.09.01ஆந்‌ திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள்‌ இணைப்பேராலயத்தில்‌ அதிவணக்கத்திற்குரிய ஆயர்‌ பேரருட்‌ கலாநிதி ஜோசப்‌ கிங்ஸ்லி சுவாம்பிள்ளை. ஆண்டகையால்‌ குருவாகத்‌ திருநிலைப்படுத்தப்பட்டார்‌. அன்றைய கால யுத்த சூழல் காரணமாக தனது சொந்தப்‌ பங்கின்‌ புனித இராயப்பர்‌ ஆலயத்தில்‌ முதல்‌ திருப்பலியை ஒப்புக்கொடுக்க அவரால்‌ முடியாமற்‌ போனது. அதனால்‌ தனது தாயின்‌ ஊரான கல்லடி டச்பாரில்‌ அமைந்துள்ள புனித இஞ்ஞாசியார்‌ ஆலயத்தில்‌ முதல்‌ திருப்பலியை நிறைவேற்றினார்‌.

1998.09.10ஆம்‌ திகதி பெரிய கல்லாறு புனித அருளானந்தர்‌ ஆலயத்தில்‌ துணைப்‌பங்குந்தந்தையாக தன்‌ பணிவாழ்வை ஆரம்பித்தார்‌. பின்னர்‌ அங்கு பங்குத்தந்தையாகவும்‌ சில காலம்‌ பணியாற்றினார்‌. 2000ஆம்‌ ஆண்டு மட்டக்களப்பு ஆயர்‌ இல்லத்தில்‌ உதவி நிதிப்பொறுப்பாளர்‌ பதவியில்‌ அமர்த்தப்பட்ட இவர்‌, மறை மாவட்ட கத்தோலிக்க இளைஞர்‌ ஒன்றியத்தின்‌ உதவி இயக்குநராகவும்‌ நியமனம்‌ பெற்றார்‌.

நாவற்குடா புனித சின்ன லூர்து அன்னை ஆலயத்தில்‌ பணியாற்றிய பின்னர்‌ 2001ஆம்‌ ஆண்டு சொறிக்கல்முனை திருச்சிலுவை ஆலயப்‌ பங்குத்‌ தந்தையாகவும்‌ பணியாற்றினார்‌. இவர்‌, 2002இல்‌ திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குநராகவும்‌ மறைமாவட்டத்திலிருந்து இந்நிலையத்தினூடாக வெளிவரும்‌ 'வெட்டாப்பு' என்னும்‌ மாதாந்த பத்திரிகையின்‌ ஆசிரியராகவும்‌ தன்‌ பணியினைத்‌ தொடர்ந்தார்‌.

2005 - 2006 வரை கண்டி தேசிய குருமடத்தில்‌ 'உருவாக்கல்‌ பணி' தொடர்பான விரிவுரையாளராகவும்‌ நியமனம்‌ பெற்றுப்‌ பணிபுரிந்தார்‌. மீண்டும்‌ மறைமாவட்டத்திற்குத்‌ திரும்பி தன்னாமுனை புனித வளனார்‌ ஆலயப்‌பங்குத்தந்தையாகக்‌ கடமையாற்றினார்‌. 2006 - 2008 வரை உரோமை நகரின்‌ திருச்சிலுவை பல்கலைக்கழகத்தில்‌ திருச்சபைச்‌ சட்டம்‌ தொடர்பான உயர்கல்வியை மேற்கொண்டதுடன்‌, முதுமாணிப்‌ (M.A) பட்டத்தினையும்‌ பெற்றுக்கொண்டார்‌.

மீண்டும்‌ நாட்டிற்குத்‌ திரும்பி 2009 - 2011 வரை தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயப்‌ பங்குத்‌ தந்தையாகக்‌ கடமையாற்றினார்‌. 2011 - 2014 வரை மட்டக்களப்பு இருதயபுரம்‌ திருஇருதயநாதர்‌ ஆலயப்‌ பங்கிலும்‌ 2015 - 2017 வரை வாழைச்சேனை புனித திரேசாள்‌ ஆலயப்‌ பங்கிலும்‌ 2016 - 2020 வரை தாழங்குடா புனித திருமுழுக்கு யோவான்‌ ஆலயப்‌ பங்கிலும்‌ பங்குக்குருவாகப்‌ பணியாற்றினார்‌. 2021 இலிருந்து தற்போது வரை தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயப்‌பங்குத்தந்தையாகக்‌ கடமையாற்றிக்‌ கொண்டிருக்கின்றார்‌.

மேலும்‌ தனது பணிக்காலத்தில்‌ பங்குப்‌ பணிகளுடன்‌ 2013 - 2019 வரை மட்டக்களப்பு மறைமாநில ஆயர்‌ அவர்களின்‌ நீதித்துறைப்‌ பொறுப்பாளராகவும்‌ செயற்பட்டுள்ளார். மேலும்‌ 2018 - 2022 வரை மட்டக்களப்பு புனித மிக்கேல்‌ கல்லூரியின்‌ பழைய மாணவர்‌ சங்கத்‌ தலைவராகவும்‌ பணிபுரிந்தார்‌

அடிகளார்‌ பணியேற்றுச்‌ செயற்பட்ட அநேக பங்குகளில்‌ பல்வேறு அபிவிருத்திப்‌ பணிகளை மேற்கொண்டிருந்தார்‌.' கருவேப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார்‌ ஆலயம்‌, வாழைச்சேனை புனித திரேசாள்‌ ஆலயம்‌, தாண்டவன்வெளி குருமனை,தாழங்குடா ஆலய புனர்நிர்மாணம்‌ ஆகியன அவற்றுட்‌ குறிப்பிடத்தக்கவையாகும்‌.

நேரம்‌ தவறாமை, அளவான உரையாடல்‌, நல்லொழுக்கம்‌ முதலான பண்புகளை அவர்‌ கொண்டிருந்தார்‌. எப்போதும்‌ புன்னகை பூத்த முகத்துடன்‌ உலா வரும்‌ அவரிடம்‌, அநீதியைத்‌ தட்டிக்‌ கேட்கும்‌ வழக்கம்‌ இருந்தது. இளைஞர்கள்‌, சிறியவர்கள்‌ என்போர்‌ மட்டில்‌ அன்பும்‌ அரவணைப்பும்‌ மிக்கவராக இருந்தார்‌. ஆன்மீகத்திலும்‌ சமூகப்‌பணியிலும்‌ அவர்களை வழிநடத்தினார்‌. மறைக்கல்வியில்‌ மட்டுமன்றி பாடசாலைக்‌ கல்வியிலும்‌ மாணவர்களை ஊக்குவித்தார்‌. உதாரணமாக இருதயபுரத்தில்‌ அவரால்‌ செயற்படுத்தப்பட்ட Give the Best என்னும்‌ திட்டம்‌ மூலம்‌ இப்‌ பங்கில்‌ பாடசாலைக்‌கல்வியின்‌ பொதுப்பரீட்சைகளில்‌ சிறந்த பெறுபேறுகளைப்‌ பெறும்‌ மாணவர்கள்‌பாராட்டி பரிசு வழங்கிக்‌ கெளரவிக்கப்பட்டனர்‌.

தான்‌ பணிபுரிந்த எப்பங்கிலிருந்தேனும்‌ அவர்‌ பாராட்டைப்‌ பெறாவிட்டாலும்‌ எப்பங்கு மக்களாலும்‌ வெறுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒருவராக அவர்‌ ஒருபோதும்‌ இருந்ததில்லை என்பது உண்மையாகும்‌.

இருபத்தைந்து ஆண்டுகள்‌ குருந்துவப்‌ பணி வாழ்வில்‌ வெற்றிகண்ட ஒருவராகமிளிரும்‌ அருட்தந்தை அவர்கள்‌, தூய ஆவியின்‌ வல்லமையுள்ள கொடைகளை எப்போதும்‌ பெற்று 'என்‌ ஆடுகளை மேய்‌' (யோவான்‌; 21: 15) என்று எமது பங்கின்‌ பாதுகாவலரும்‌ முதல்‌ திருத்தந்தையுமான புனித இராயப்பருக்குக்‌ கூறியது போல அனைத்து இறைமக்களையும்‌ பேணி வளர்த்து வழிநடத்தும்‌ குருவாகக நீடு வாழ இறையருள்‌ கிடைப்பதாக எமது செபத்தில்‌ என்றும்‌ அடிகளாரை நினைவிற்‌கொள்வோம்‌.


Comments