இறை-சமூக பணிகளில் அர்ப்பணிப்புடன் உழைத்த ஆயர் L.R.அன்ரனி ஆண்டகை: ஒரு சிறு தொகுப்பு

  இறை-சமூக பணிகளில் அர்ப்பணிப்புடன் உழைத்த ஆயர் L.R.அன்ரனி ஆண்டகை: ஒரு சிறு தொகுப்பு

திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மறைபணியையும், சமூகப் பணியையும் ஆற்றி இரண்டு மாவட்ட மக்களினதும் பேரபிமானத்தைப் பெற்றவர் தான் முன்னாள் ஆயர் பேரருட்திரு L.R. அன்ரனி ஆண்டகை.

மட்டு. - திருமலை மறை மாவட்டத்தின் முதல் சுதேச ஆயர் இவர், வட மாகாணத்திற்குப் பல்துறைகளிலும் சிறப்புத் தேடித்தந்த கரம்பனைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 

யாழ். மறை மாவட்டத்தின் முதல் சுதேச ஆயரான பேரருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை, ஆயர் பேரருட் தந்தை தோமஸ் செளந்தரநாயகம், ஆயர்  பேரருட்தந்தை யோசப் கிங்ஸிலி சுவாம்பிள்ளை என பல ஆயர்களைத் தந்தது கரம்பன் பிரதேசமே, அந்த பிரதேசம் தான் ஆயர் L.R.அன்ரனி ஆண்டகை அவர்களையும் தந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

1927 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தொன்பதாம் திகதி வஸ்தியான் பிள்ளை லியோ இராஜேந்திரத்திற்கும், பேதுருப் பிள்ளை மாரம்பிள்ளை ஆகியோருக்கு மகனாக கரம்பனில் பிறந்தார். இவருடைய தந்தையார் களுத்துறையில் அஞ்சல் அதிபராகப் பணியாற்றி இருந்தார்.

 ஆரம்பக் கல்வியை கரம்பொன் திருக்குடும்ப பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை காவலூர் புனித அந்தோனியார் கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ். புனித பத்திரியாசியார் கல்லூரியிலும் கற்று ஒழுக்கசீலராய் வாழ்ந்து வந்த போது குருவாக வேண்டும் என்ற ஆவல்  இவரை தூண்டியது.

இதன் காரணத்தால் தன் பதின் மூன்றாவது வயதில் யாழ். புனித மடுத்தீனார் இளம் குருமடத்தில் இணைந்தார். பின்பு தமது குருத்துவக் கல்வியை கொழும்பு பொறளை புனித பேனார்ட் குருமடத்திலும் தொடர்ந்து தத்தவ வியலையும், இறையியலையும் உரோமையிலும் பயின்று 1945 இல் பேராயர் சிஜிஸ்மொண்டி ஆண்டகையினால் அங்கு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார் முதற்திருப்பலியை உரோமாபுரியில் உள்ள இராயப்பர் தேவாலயத்தில் ஒப்புக்கொடுத்தார்.

அஸிசி, லூர்துபதி ஆகிய புனிதத் தலங்களைத் தரிசித்தபின் 1955 ஆம் ஆண்டு இவர் இலங்கை திரும்பினார். இளம் குருவான L.R.அன்ரனி முதலில் நல்லூர்ப் பங்கில் பணியாற்ற நியமனம் பெற்றார். அதன் பின் யாழ். மரியன்னை பேராலயத்தில் உதவிப் பங்குத் தந்தையாகவும், பின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றினார்.

அதன்பின் நாரந்தனைப் பங்குத் தந்தையாக அரும்பணியாற்றினார். அதைத் தொடர்ந்து திருமலை மட்டுநகர் ஆயர் இக்னேஷஸ் கிளென்னி ஆண்டகையின் செயலாளராக சில காலம் பணியாற்றினார். 1962 இல் தோலகட்டி செபமாலைத்தாசர் ஆச்சிரமத் துறவிகளுக்கு உயர் தலைவராகவும் ஆன்மீகக் குருவாகவும் நியமனம் பெற்று அங்கு பணியாற்றினார்.

அக்காலகட்டத்தில் துறவற சபையின் ஒழுங்கு விதிகளைத் தானும் கடைப்பிடித்து அங்கிருந்த துறவிகளுக்கு உந்து சக்தியாக விளங்கினார். 1968  இல் யாழ். துணை ஆயராக நியமனம் பெற்றார். யாழ். முன்னாள் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகை இறையடிசேர, திருமலை மட்டுநகர் ஆயர் மேதகு தீயோகுப்பிள்ளை ஆண்டகை யாழ்.ஆயராக நியமனம் பெற்றார். ஆயர் தீயோகுப் பிள்ளையின் இடத்துக்கு L.R.அன்ரனி ஆண்டகை திருமலை மட்டுநகர் துணை ஆயராக 1973 இல் நியமனம் பெற்று, 1974 இல் ஆயர் நியமனம் வழங்கப்பட்டது. 

திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் ஆயரான முதல் மறை மாவட்டக்குரு என்ற சிறப்பைப் பெற்ற இவருக்கு திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாவட்டம் ஒன்றும் புதிதாய் இருக்கவில்லை. 

திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் சமூக நிலைமைகளை, சூழலை நன்கறிந்தவர். ஆதலால் ஆயராக வந்தவுடனேயே பல்லின மக்கள் வாழும் இம்மறை மாவட்டத்தில் விசுவாச வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். குருக்கள் - துறவிகள், பொதுநிலையினர் என பலரையும் பணிகளில் பங்குதாரராக்கினார்.

மறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் துறவற சபையினரை அமர்த்தி பணிபுரிய ஊக்குவித்தார். மறைக்கல்விப் பணிகள் உத்வேகம் பெற வாய்ப்புகளை உருவாக்கினார். கிழக்கை சூறாவளி சூறையாடிய ஆண்டு. மக்கள் வீடு வாசல்களை இழந்து கஷ்டப்பட்டனர்.

இந்தச் சூழல், திருச்சபை சமூகப் பணிகளில் முழு மூச்சோடு ஈடுபட வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஏற்படுத்தியது. திருச்சபையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான அனைத்துலக அமைப்பின் கிளையான கொழும்பு 'செடெக்' நிறுவனத்தின் துணையுடன் பல்வேறு சமூக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆயரின் தலைமையில் முன்னெடுக் கப்பட்டன.

இப்பணிகள் காலத்தின் தேவைக்கேற்ப இன்று வரை சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் படிமுறை வளர்ச்சியின் ஒரு கட்டமாக 'எகெட்' எனப்படும் கிழக்கு மனித பொருளாதார அபிவிருத்தி நிலையம் உருவானது.

பல்லின மக்களுக்கும் பேதம் பிரிவுகள் பாராது பணியாற்றி வருவதன் மூலம், 'எகெட்' என்ற பெயர் இன்று கிழக்கு மாகாண மக்களின் மனங்களில் நிலைத்துவிட்டது. இதற்கு வழிகோலியவர் காலஞ்சென்ற நமது ஆயர் L.R.அன்ரனி ஆண்டகை அவர்களே.

1983 இல் அவர் நோய் காரணமாக இளைப்பாறி திருமலை ஆயர் இல்லத்தில் வாழ்ந்து, 2004 ஆம் ஆண்டு குருத்துவப் பொன் விழாவைக் காணும் பேறு பெற்றார். 03.12.2012 இல் ஆயர் அவர்களை இறைவன் தம்மிடம் அழைக்கத் திருவுளமானார்.

Comments