மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு:
மனநிறைவுடன் அரச பணியிலிருந்து ஓய்விற்கு செல்கின்றேன் - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களாக என்னுடன் கடமை புரிந்த உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பினால் செவ்வனே எனது மக்கள் பணியை நான் மாவட்டத்திற்காக ஆற்ற முடிந்திருந்தது, அதனால் மனநிறைவுடன் எனது 32 வருட அரச பணியில் இருந்து ஓய்விற்கு செல்கின்றேன் என மட்டக்களப்பில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.
32 வருடங்கள் அரச சேவையை பூர்த்தி செய்து அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு (27) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வொன்று இடம்பெற்றது.
1991 ஆம் ஆண்டு அரச நிருவாக சேவையில் தனது அரச பணியை தொடங்கிய கலாமதி பத்மராஜா அவர்கள் அம்பாரை மாவட்டத்தில் தமது முதல் நியமனத்தை பெற்று கடமையை ஆரம்பித்ததுடன், பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளராக நியமனம் பெற்று தமது கடமையினையாற்றியுள்ளார்.
அதன் பின்னர் பிரதேச செயலாளராக மாவட்டத்தின் மண்முனை வடக்கு உள்ளிட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றி, பின்னர் நிருவாக சேவையில் பதவியுயர்வு பெற்ற இவர் மாகாண அமைச்சிற்கு நியமிக்கப்பட்டு அங்கு 10 வருடங்கள் பல்வேறு அமைச்சுகளில் செயலாளராக மாறி மாறி கடமையாற்றியிருந்த நிலையில், 2020 ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமைப் பொறுப்பினை ஏற்று பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் இடமாற்றலாகி மாகாணசபையில் கடமையாற்றி, இவ்வாண்டு தை மாதம் 17 திகதி முதல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவை அங்கிகாரத்துடன் மீளவும் நியமிக்கப்பட்டு செவ்வனே தமது கடமையினை மாவட்ட மக்களுக்காக ஆற்றி வந்த நிலையில் எதிர்வரும் 29 ஆந் திகதி தமது 60 வயதினை பூர்த்தி செய்து அரச சேவையில் இருந்து ஓய்விற்கு செல்லவுள்ள நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரான இவரின் சிறந்த சேவையினை பாராட்டி பிரியாவிடையளிக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி சிறிகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (27) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ,சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எம்.பஸீர், மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ,.ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கணபதிப்பிள்ளை மதிவண்ணன், மாவட்ட செயலக பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்களான வீ.நவனீதன், ஆர்.ஜதீஸ்குமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் லக்சிகாக தீசன், மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் பிரதம முகாமையாளர் J.F.மனோகிதராஜ், ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு ஒய்வு பெறவிருக்கும் அரச அதிபரின் சேவையினை வாழ்த்தியதுடன் அரச அதிபரிற்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலைகள் அணிவித்து கௌரவமளித்துள்ளனர்.
இவரது சேவையினை மாவட்டத்தின் அனைத்து இன மக்களும் உயர்வாக மதித்து பாராட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment