கிழக்கு பல்கலைக்கழகத்தின் தலைமையில் மினி ஒலிம்பிக் போட்டிகள்....

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் தலைமையில் மினி ஒலிம்பிக் போட்டிகள்....

இலங்கையின் அரச பல்கலைக் கழகங்களிற்கிடையிலான விளையாட்டுப் போட்டியானது 03 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் நிகழ்வாகும். இலங்கையின் 16 அரச பல்கலைக் கழகங்கள் சுழற்சி முறையில் தலைமைதாங்கி நடாத்தும் இந்நிகழ்வினை இம்முறை கிழக்கு பல்கலைக்கழகம் தலைமையேற்று நடாத்துகின்றது.
இலங்கையின் அரச பல்கலைக் கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டி நிகழ்வினை நடாத்துவதானது கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு மட்டுமன்றி முழு வட கிழக்கிற்கே ஒரு தனித்துவமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பெருமைமிகு நிகழ்வு ஒரு வரலாற்றுப் பதிவாக அமைவதோடு விளையாட்டு மேம்பாட்டோடு கூடிய அமைதியான சமூகத்தை கட்டியெழுப்ப இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வரும் 16அரச பல்கலைக் கழகங்களை உள்ளடக்கிய இந்த உன்னத நிகழ்விற்கான போட்டித் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 40 நிகழ்வுகள் உட்பட 24 விளையாட்டுகளில் 6,000இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வினை நடாத்தும் தலைமை ஏற்பு என்ற வகையில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பார்வையாளர் விளையாட்டு அரங்கொன்று கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இவ்விளையாட்டு அரங்கானது முன்னாள் துணைவேந்தர் அருள் கலாநிதி ராஜேந்திரம் அவர்களின் பெயரை தாங்கி நிற்பது மேலும் சிறப்புக்குரியதாகும். கிழக்கின் அதி உச்ச வளப்பங்கீட்டுடன், இப்போட்டிகள் கல்லடி சிவானந்தா மைதானம், புனித மிக்கேல் கல்லூரி, மியானி தொழிநுட்ப கல்லூரி உள்ளக மைதானங்கள், வெபர் விளையாட்டரங்கு, கல்லடி கடற்கரை மற்றும் பல்கலைக்கழக பிரதான மைதானம் ஆகியவற்றில் இடம்பெறுகின்றன.
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டியானது இறுதி போட்டிகளுக்கான தொடக்க விழாவுடன் இம்மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகி, 08ஆம் திகதி நிறைவு விழாவோடு நிறைவடையவுள்ளது.
கிழக்கின் சிறப்புக்களையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக பிராந்திய உள்ளுர் உற்பத்தியாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் எதிர்பார்ப்பதோடு, சந்தையிடல் மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஆர்வத்தோடு பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றன.
அதே வரிசையில் இன, மத பேதங்கள் அனைத்தையும் தகர்த்தெறியம் இந்த நிகழ்வை தம்முடன் இணைந்து கொண்டாட சமூகத்தையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தினர் அழைத்து நின்கின்றனர்.

Comments