கிழக்குப் பல்கலைக்கழக மினி ஒலிம்பிக்கின் நிறைவு விழா.........
2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டி நிகழ்வானது இம்முறை இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தலைமையின் கீழ் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டியானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வரும் இலங்கையின் 16 அரச பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெறுவதாகும். அந்தவகையில் கடந்த யூலை மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகிய இவ்விளையாட்டு விழாவின் கோலாகலமான இறுதி நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான மைதானத்தில் நடைபெற்றது.
2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டிற்கான தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமை தாங்கியதுடன், பிரதம விருந்தினராக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக ஏனைய அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த உபவேந்தர்கள், பல்கலைக்கழகங்களின் உடற்கல்விப் பிரிவின் இயக்குனர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பாக பிரதி உபவேந்தர் பேராசிரியர். கே.இ.கருணாகரன், இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு சங்கத்தின் தலைவரும் 2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டிற்கான உபதலைவருமான பேராசிரியர் என். ராஜேஸ்வரன், பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பகிரதன் மற்றும் பணிப்பாளர்கள், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், சிரேஸ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டி நிகழ்வின் இலட்சினை மற்றும் Mascot ஆகியவற்றின் காட்சிப்படுத்தலுடன், பாடசாலை மாணவர்களின் இசை வாத்தியங்கள் முழங்கிய அணிவகுப்போடு, அனைத்து அரச பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த போட்டியில் பங்கேற்ற வீர வீராங்கனைகளின் அணிவகுப்புடனும் பிரதம அதிதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களினால் நிகழ்த்தப்பட்ட வரவேற்பு நடன நிகழ்வு மற்றும் திருகோணமலை வளாக மாணவர்களினால் ஒப்புவிக்கப்பட்ட யோகா நடனம் மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களினால் வழங்கப்பட்ட நடனம் ஆகியவை ஒட்டுமொத்த நிகழ்வினையும் அலங்கரித்திருந்தது.
இந்நிகழ்வில் ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற பல்கலைக்கழகங்களுக்கான கேடயங்கள் வழங்கப்பட்டது.
அந்தவகையில் இம்முறை கிழக்குப் பல்கலைக்கழகமானது ஆண்கள் பிரிவின் உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்றதுடன், நடைபெற்று முடிந்த இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டி நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகமானது முதலாமிடத்தைப் பெற்றது மட்டுமன்றி ஒட்டுமொத்த விளையாட்டு நிகழ்வின் சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.
மேலும் நடைபெறவிருக்கும் இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டுப் போட்டி நிகழ்வானது ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வான வேடிக்கை நிகழ்வோடு இனிதே இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டியானது நிறைவு பெற்றுள்ளது.
சமூகத்தின் வளர்ச்சிக்கும் நாடளாவிய ரீதியில் விளையாட்டுத்துறையை வளர்ப்பதற்கும் மற்றும் அமைதியான சமூதாயத்தை நாட்டில் உருவாக்குவதற்கும் அனைவரும் ஒன்றுபடுவோம் என்கின்ற தொனிப்பொருளில் கிழக்குப் பல்கலைக்கழகமானது செயற்பட்டுள்ளதென பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment