சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி............

 சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி..........

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியொன்று இன்று (27) திகதி முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்திலிருந்து மட்டக்களப்பு திருமலை வீதியூடாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியில் 10 மாவட்டங்களில் இருந்து சுமார் 500 இற்கு மேற்பட்ட செவிப்புலன் வலுவற்றோர் கலந்து கொண்டிருந்ததுடன், அவர்களுக்கான உரிமைக் கோரிக்கைகள் அடங்கிய பல்வேறுபட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மட்டக்களப்பு நகர மண்டபத்தினை சென்றடைந்ததும், அங்கு பிரதான அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
சர்வதேச சைகை மொழி தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் யாவும் "செவிப்புலனற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் சைகை மொழியை பயன்படுத்தக் கூடிய உலகம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
நகர மண்டபத்தில் இடம்பெற்ற சைகை மொழி தினக் கொண்டாட்ட பிரதான நிகழ்வானது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலினை தொடர்ந்து செவிப்புலனற்ற மாணவனின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகியது.
இலங்கை தமிழ் செவிப்புல வலுவற்றோர் அமைப்பின் தலைவர் கோ.வள்ளிகாந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்ததுடன், நிகழ்விற்கு விசேட விருந்தினராக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் கலந்து சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கி.இளம்குமுதன், இலங்கை செவிபுலனற்றோர் மத்திய சம்மேளனத்தின் தலைவர் பிறையன் சுசந்த, முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
வரவேற்புரை, தலைமையுரையினை தொடர்ந்து வாழ்வோசை பாடசாலை மாணவர்களின் நடன ஆற்றுகைகள், பிரதம விருந்தினர் உள்ளிட்ட அதிதிகளின் உரைகள், சைகை மொழி பெயர்ப்பாளரை கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இதன்போது சைகை மொழி பயிற்சி நெறியொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





Comments