துனித் வெல்லாலகே: இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களை அச்சுறுத்தும் இலங்கையின் புதிய நட்சத்திரம்.............

 துனித் வெல்லாலகே: இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களை அச்சுறுத்தும் இலங்கையின் புதிய நட்சத்திரம்.............

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் யாராவது ஒருவரைக் கண்டு இந்திய அணி அச்சம் கொண்டது என்றால் அது இவராகத்தான் இருக்கும். விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில் என மூத்த வீரர்கள் அனைவரையும் அடுத்தடுத்து வெளியேற்றிய போது இவரைக் கண்டு இந்தியா முழுவதும் போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அவர் துனித் வெல்லாலகே. இலங்கை அணியின் 20 வயது நட்சத்திரம்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்த போதிலும், இலங்கை மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியிலுள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் இலங்கை அணி பேசுப் பொருளாக மாறியுள்ளது. அதற்கும் அவரே காரணம். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அங்கீகாரத்தை பெற்ற வெல்லாலகேயின் இப்போது எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியுடனான போட்டியில் துனித் வெல்லாலகே, பந்து வீச்சு, களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்திய திறமையே, இலங்கை அணி தொடர்பில் பேச பிரதான காரணமாக அமைந்தது.

யார் இந்த வெல்லாலகே?

2003ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி துனித் நெத்மிக்க வெல்லாலகே, மொறட்டுவ பகுதியில் பிறந்துள்ளார். மொறட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்துள்ளார் அவர்,  தனது 9வது வயதில் பாடசாலையின் கிரிக்கெட் கழகத்தில் இணைந்து, கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துள்ளார். புனித செபஸ்டியன் கல்லூரியின் 13 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை அவர் 2013ம் ஆண்டு பெற்றுக்கொண்டுள்ளார். பாடசாலை சார்பில் கிரிக்கெட் விளையாட்டில் சகல துறைகளிலும் பிரகாசித்த துனித் வெல்லாலகே, 2016ம் ஆண்டு மருதானை புனித ஜோசப் கல்லூரியில் இணைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அந்த பாடசாலையின் கிரிக்கெட் குழாமின் வதிவிட பிரதிநிதியான துனித் வெல்லாலகே, 2022ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 19 வயதிற்குபட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்காக தெரிவானார். 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணித் தலைவராக துனித் வெல்லாலகே நியமிக்கப்பட்டார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாகசம்:

2019ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்களை பெற்ற வீரராக துனித் வெல்லாலகே வரலாற்றில் பதிவானார். அவர் அந்த போட்டிகளில் 17 விக்கெட்களை தனதாக்கிக் கொண்டார். ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடி, தலா 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார் துனித் வெல்லாலகே. பேட்டிங்கிலும் திறமைகளை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே, சதம் மற்றும் அரை சதம் அடங்களாக அந்த தொடரில் 264 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையையும் துனித் வெல்லாலகே பெற்றுக்கொண்டார். தென் ஆபிரிக்கா அணியுடனான அரையிறுதிப் போட்டியில் துனித் வெல்லாலகே 113 ஓட்டங்களை பெற்று, வரலாற்றில் இடம்பிடித்துள்ளார், 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒன்றில் சதம் பெற்ற முதலாவது இலங்கை அணித் தலைவர் என்ற பெருமையையும் துனித் வெல்லாலகே தனதாக்கிக் கொண்டார்.

''இந்த பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் - அவர் இலங்கையின் தலைவர்'

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்பின் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடனான போட்டியில் துனித் வெல்லாலகே அடித்த சதம் மற்றும் அவரது திறமைகள் குறித்து, சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது.

''அவரது பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் போட்டியில் அதிக விக்கெட்களை பெற்றுக்கொண்டமை ஏன் என்பதை உங்களாலேயே புரிந்துக்கொள்ள முடியும்' என மேற்கிந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் காலோஸ் பிரத்வெட் அங்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், துனித் எதிர்காலத்தில் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என சர்வதேச கிரிக்கெட் விமர்சகரான எலன் வில்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

துனித் வெல்லாலகே, தந்திரமான கிரிக்கெட் வீரர் என இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆனல்ட் குறிப்பிட்டுள்ளார்.

''தந்திரத்தில் அவர் திறமையாளர். மைதானத்தில் களத்தடுப்பிற்கு வீரர்களை நிறுத்தும் விதம் மற்றும் விக்கெட்களை கைப்பற்றும் விதத்திலும் அவர் ஆக்ரோஷமாக விளையாடுகின்றார். இது அவரை சம்பியனாக்கும் விதத்திற்கு கொண்டு செல்கின்றது.' என அவர் கூறியுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது, இலங்கை மீண்டெழும் அணிக்காக துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய A அணியுடனான போட்டி குழாமிலும் துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவை வியப்பில் ஆழ்த்திய துனித் வெல்லாலகே:

அவுஸ்திரேலிய அணி எதிரான தனது முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் துனித் வெல்லாலகே பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பிரபல வீரர் ஸ்டுவத் சுமித்தின் விக்கெட் வீழ்த்தி, தனது சர்வதேச ஒரு நாள் தொடரில் முதலாவது விக்கெட்டை தனதாக்கிக் கொண்டார். துனித் வெல்லாலகே, தனது முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்களை கைப்பற்றியிருந்ததுடன், ஒரு ஆட்டமிழப்பையும் ஏற்படுத்தியிருந்தார். அவர் ஐந்து போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றி, அந்த தொடரில் அதிக விக்கெட்களை பெற்ற வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்;டியில் விளையாடியதை அடுத்து, அவர் டெஸ்ட் அங்கீகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

''மட்டையும் பந்தும் முதலில் தந்தது அம்மா'

தான் அவசரமான பயணமொன்றை மேற்கொள்ளவில்லை எனவும், படிப்படியாகவே முன்னேறியதாகவும் துனித் வெல்லாலகே அண்மையில் இடம்பெற்ற நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார், தனக்கு பயிற்சிகளை வழங்கிய ஒவ்வொரு பயிற்சியாளர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.

துனித் வெல்லாலகேயின் தந்தையான நிரோஷன் வெல்லாலகேவும் கிரிக்கெட் விளையாட்டு வீரராவார். அவர் மொறட்டுவ வெல்ஸ் குமார கல்லூரியின் கிரிக்கெட் அணியில் 1993ம் ஆண்டு அணித் தலைவராக விளையாடியுள்ளார்.  தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு தந்தையிடமிருந்து கிடைத்த வழிகாட்டல் மிக முக்கியமானது என துனித் வெல்லாலகே கூறியுள்ளார்.

துடுப்பாட்ட மட்டை மற்றும் பந்து ஆகியவற்றை முதலில் வழங்கியது தனது தாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். துனித் வெல்லாலகே, தனது குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன், அவருக்கு இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர்.

இந்தியாவிற்கு எதிரான சுப்பர் 4 சுற்றில் துனித் வெல்லாலகேயின் சாதனை:

இலங்கை கிரிக்கெட் அணியில் ஐந்து விக்கெட்களை பெற்றுக்கொண்ட முதலாவது இளைய வீரர் என்ற பெருமையை கடந்த இந்திய அணியுடனான போட்டியின் போது துனித் வெல்லாலகே தனதாக்கிக் கொண்டார். இதன்படி, அன்றைய போட்டியில் துனித் வெல்லாலகே ஐந்து விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

துனித் வெல்லாலகே, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 40 ஓட்டங்களை கொடுத்து, ஐந்து விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். இதன்படி, அவர் ஒரு நாள், சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அன்றைய போட்டியில் சிறந்த பந்து வீச்சாளராக பதிவானார். அதே போன்று 46 பந்துகளை எதிர்கொண்டு, ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை துனித் வெல்லாலகே பெற்றுக்கொண்டார்.

வெல்லாலகேவை சேர்க்க போட்டி போடும் IPL அணிகள்:

இந்திய அணிக்கு எதிராக துனித் வெல்லாலகே விளையாடிய விதம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் மாத்திரமன்றி, பல IPL அணிகளும் அவதானத்தை செலுத்தியுள்ளன. மும்பை இந்தியன்ஸ், டில்லி கெப்பிட்டல், ராஜஸ்தான் ரோயல்ஸ் உள்ளிட்ட பல அணிகள் துனித் வெல்லாலகே, தொடர்பில் சமூகவலைத் தளத்தில் அவதானம் செலுத்தியிருந்ததை காண முடிந்தது.

எதிர்வரும் தசாப்தத்தில் துனித் வெல்லாலகே, இலங்கையின் ஒரு நாள் போட்டிகளில் மிக முக்கியமான வீரராக திகழ்வார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments