லிபியா வெள்ளம்: பல கி.மீ. தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்ட மக்கள் - உறைய வைக்கும் காட்சிகள்...........
டேனியல் புயலால் தாக்கப்பட்ட லிபியாவில் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு அணைகள் உடைந்ததால் லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டெர்னா என்ற நகரத்தில் குடியிருப்புகள் பல முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கின. பலர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். பல ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதால் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
எகிப்து, துருக்கி என அருகில் உள்ள நாடுகளிலிருந்து மீட்புக் குழுக்கள் லிபியாவுக்கு வந்துள்ளன. எனினும் ஏற்கனவே நிலவி வரும் அரசியல் சிக்கல்கள் காரணமாக, அரசு இயந்திரம் பணி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், சுமூகமான உறவு இல்லாததால் வேறு நாடுகளிலிருந்து உதவிகள் பெறுவதும் சிக்கலாகி உள்ளது.
லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டெர்னா நகரத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. லிபியாவில் டேனியல் புயல் தாக்கியதால், இரண்டு அணைகள் திடீரென உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
குடும்பங்கள் பல மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கிய காட்சிகளை பார்த்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். கண் முன்னே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கதைகளையும் மயிரிழையில் உயிர் தப்பிய கதைகளையும் மக்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. மேலும் பல ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதால், கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என டெர்னா நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் உயிர் தப்பிய மரியம் அல்க்விதி என்ற பெண், வெள்ள நீர் சூழ்ந்ததால் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் தனது மூன்று சகோதரர்களுடன் இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலும் சிலர் இருப்பதை பார்த்துள்ளார். 'ஆனால் திடீரென அவர்களை காணவில்லை. கட்டடங்கள் அதிர்வதைக் கண்டு முதலில் பூகம்பம் என நினைத்தோம். ஆனால், பிறகு தான் தெரிந்தது, வெள்ளத்தில் அருகில் இருந்த கட்டடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுகின்றன என்று. அப்போது தான், மொட்டை மாடியில் இருந்தாலும் நாங்களும் உயிரிழக்க வாய்ப்புள்ளது என்ற அச்ச உணர்வு தொற்றிக் கொண்டது' என்றார்.
முறையான வானிலை எச்சரிக்கை விடுத்திருந்தால் பெரும்பாலான உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. லிபியாவின் அல்-எய்ல்வா என்ற பகுதியில் 96% கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆற்றுக்கு அருகில் இருந்த பல கட்டடங்கள் முழுவதும் தரைமட்டமாகி அதன் அடிதளங்களை மட்டுமே காண முடிகிறது. உடல்களை மீட்டெடுக்கும் நிபுணத்துவம் கொண்ட மீட்புப் பணியாளர்கள் தேவை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
லிபியாவில் வழக்கமாக செப்டம்பர் மாதம் முழுவதுமே 1.5 மி.மீ மழை மட்டுமே பெய்யும். ஆனால் கடந்த வாரம் 24 மணி நேரத்தில் 400 மி.மீ மழை பெய்துள்ளது. இதுவரையில்லாத அளவிலான மழை இது என லிபிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உயிர் தப்பிய 18 வயது மாணவி ரஹ்மா பென் காயல், டெர்னா நகரமே வெள்ளத்தால் இரண்டாக பிளவுப்பட்டதாக கூறுகிறார். 'இந்த இரண்டு பாதிகளுக்கு இடையில் சிக்கிய அனைவரும் உயிரிழந்து விட்டனர்' என்றார்.
லிபியாவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் 20 ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
Comments
Post a Comment