மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்பு!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (31) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான், நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத் அகியோரது பங்கேற்புடன் இக்கூட்டம் இடம் பெற்றது.
இதன் போது வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் இம்மாவட்டத்தின் போக்குவரத்து, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், மீன்பிடி, சட்டவிரோத மணல் அகழ்வு, யானை வேலி அமைத்தல், பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இரால் வளர்ப்பு திட்டம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இடப்பற்றாக்குறை உட்பட்ட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் பணிக்குழுவினர் உள்ளிட்ட உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
Comments
Post a Comment