ஆயித்தியமலை சதா சகாய அன்னை திருத்தல இன்று வரை வரலாறு.............. (பகுதி-03)

 ஆயித்தியமலை சதா சகாய அன்னை திருத்தல இன்று வரை வரலாறு..............  (பகுதி-03)

1978ம் ஆண்டின் ஆரம்பத்தில் கல்குடாவில் இயேசுசபைத்துறவிகளின் தென்னந் தோட்டத்தில் இருந்த மின் பிறப்பாக்கும் இயந்திரம் விற்கப்பட இருந்த போது ஆயரின் அனுமதியுடன் அதனை அருட்தந்தை டொமினிக் சாமிநாதன் அடிகள் வாங்கினார். அதனை ஆயித்தியமலைக்குக்கு கொண்டு வந்ததன் மூலம் மின்சார வசதியின்றியிருந்த ஆயித்தியமலையில் தினமும் வெளிச்சம் கிடைத்தது.

1978 நவம்பர் 23ம் திகதி ஏற்பட்ட சூறாவளியினால் ஆயித்தியமலைப் பகுதியும் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. ஆலயம், குருமனை, பல நூற்றுக்கணக்கான வீடுகள், என்பன அழிந்து போனதுடன் மக்களின் வயல்களும் அழிந்தன. தொழில் பாதிக்கப்பட்டது. சூறாவளி புனர்வாழ்வுப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியேற்பட்டது. மக்களைச் சிறு சிறு சங்கங்களாக அமைத்து அச்சங்கங்கள் வழியாக வீடுகட்டுதல், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், சுகாதாரக் கல்வியை வளர்த்தல், மேட்டுநிலப் பயிர்ச்செய்கைகளைக் கையாளுதல், சேமித்தல் என்பன இந்த புனர்வாழ்வுத் திட்டங்களில் முக்கிய இடத்தை வகித்தன. 

கொழும்பு செடெக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை ஜோ.பெர்ணாண்டோ அவர்கள் தமது ஊழியர்களுடன் மட்டக்களப்பு வந்து தங்கிப் பணிபுரிந்து உதவினர். அவ்வேளை றாகமையிலிருந்து அருட்சகோதரி தெரேஸ் ரட்நாயக்க அவர்களும், மொனறாகலையிருந்து அருட்சகோதரிகள் ஈடித் அவர்களும், மற்ரில்டா அவர்களும் ஆயித்தியமலைக்கு  வந்து தங்கியிருந்து பணிபுரிந்தனர்.

 ஆயித்தியமலை காடும் வயலும் நிறைந்த பகுதியாதலால் இங்கு பாம்புகளும் அதிகம். பாம்புக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிதும் உதவினார். அவர் திருக்குடும்பக்கன்னியர் தாதியாக இருந்த சகோதரி தெரேஸ் ரட்நாயக்கதுணையுடன் ஆயித்தியமலையில் உள்ள இளம் பெண்கள் பலருக்கு அருட்சகோதரி யூபிறேசியா அவர்களினதும் ஏனையவர்களினதும் முதலுதவிப்பயிற்சி அளித்தார். பாம்பினால் கடியுண்டவர்கள் இவர்களிடம் முதலுதவி பெற்றுப்பின்னர் குருமனைக்குக் கொண்டு வரப்படுவர். அங்கிருந்து மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இக்காலகட்டத்தில் ஆலயமும் திருத்தியமைக்கப்பட்டு, புதிய ஒரு குருமனையும் கட்டப்பட்டது. அருட்தந்தை டொமினிக் சாமிநாதன் மறைக்கல்வி இயக்குனராக இருந்தமையினால் மறையாசிரியர்களின் பயிற்சிப் பாசறைகளையும், மாதாந்த தியானங்களையும், வருடாந்த மகாநாடுகளையும் ஆயித்தியமலையிலேயே நடத்துவது அவருக்கு மிகவும் வசதியாக இருந்தது. அத்துடன் குழுவாழ்வுச் சகோதரிகள் இயக்கம் என்னும் பணிமுறையும் இக்காலத்திலேயே டொமினிக் சாமிநாதன் அடிகளால் ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற் பயிற்சிகளும் ஆயித்தியமலையில் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் நிரந்தர மறையாசிரியர் பயிற்சியும் ஆயித்தியமலையில் ஆரம்பிக்கப்பட்டு பலர் மறையாசிரியர்களாகப் பயிற்றப்பட்டு மறைமாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் பணிபுரிய அனுப்பப்பட்டனர். இக்காலத்தில் அருட்சகோதரி லொறிலியா ஆயித்தியமலையில் தங்கியிருந்து பணிபுரிந்தார்.

இக்காலகட்டத்தில் அருட்தந்தை தேவதாசன் அடிகள் புதிய குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு ஆயித்தியமலைக்குத் துணைப்பங்குத் தந்தையாக ஆயர் அவர்களால் அனுப்பப்பட்டார். இக்காலத்திலேதான் உன்னிச்சையில் புனித அந்தோனியார் ஆலயமும், நெல்லிக்காட்டிலே அப்போஸ்தலரான புனித சின்னப்பர் பெயரால் ஒரு ஆலயமும் டொமினிக் சாமிநாதன் அடிகளாரால் ஆரம்பிக்கப் பட்டன.

அருட்தந்தை நோபட் ஒக்கஸ் அடிகளார் புல்லுமலையில் இருந்து திருகோணமலைக்கு குருமுதல்வராக பதவி உயர்வு மாற்றம் பெற்ற இக்கால கட்டத்தில் புல்லுமலைப் பங்கும் ஆயித்தியமலையுடன் இணைக்கப்பட்டது.

1981ல் கோப்பாவெளி புனித தோமையார் சிற்றாலயம் ஒரு ஓலைக்குடிலாக இருந்து செங்கல்லாலான ஒரு சிற்றாலயமாகக் கட்டப்பட்டது. அவ்வேளை S.அன்ரனி போதகர் புல்லுமலையில் இருந்து கொண்டு ஒரு முழுநேர மறையாசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். இக்கோவிலைக் கட்டி முடிப்பதில் அவரே முன்னின்று அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார்.

1983ம் ஆண்டின் இறுதியில் டொமினிக் சாமிநாதன் அடிகள் ஆயித்தியமலையில் இருந்து மட்டக்களப்பு திருப்பெருந்துறைக்கு வந்தார். அவ்வேளை அருட்தந்தை தேவதாசன் அடிகளாரே ஆயித்திமலை - புல்லுமலை பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

போதகர் அன்ரனியும் புல்லுமலையிலிருந்து மாற்றலாகி திருக்கோவில் பங்கிற்குச் சென்று பொத்துவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் தனது வதிவிடத்தைக் கொண்டவராக, திருமணம் முடித்த முதலாவது தியாக்கோனாக ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டு அப்பகுதியில் அரிய பல பணிகளைச் செய்தார்.

1986ம். ஆண்டில் தேவதாசன் அடிகளார் மறைக்கல்வி இயக்குனராகவும், குருமட அதிபராகவும் நியமனம் பெற்று மட்டக்களப்புக்குச் சென்ற போது அருட்தந்தை பிலிப் லூக்காஸ்பிள்ளை அவர்கள் பங்குத் தந்தையானார். பின்னர் அருளானந்தம் அடிகள் ஆயித்தியமலைப் பங்குத் தந்தையாக நியமனம் பெற்றார். 

1988ம் ஆண்டில் அருட்தந்தை சாந்தன் இம்மானுவேல் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். 1990ம் ஆண்டில் அருட்தந்தை பொன்னையா ஜோசப் அவர்கள், (இன்றைய மட்டு மறை மாநில ஆயர்) பங்குத் தந்தையானார். அவரைத் தொடர்ந்து அருட்தந்தை நோயல் இம்மானுவேல் (இன்றைய திருமலை மறைமாநில ஆயர்) அவர்கள்  சிறிது காலம் பங்குத்தந்தையாகப் பணி புரிந்தார்.

1991ம். ஆண்டு டிசம்பர் மாதத்தில் அருட்தந்தை இக்னேசியஸ் அடிகள் ஆயித்தியமலைப் பங்கினைப் பொறுப்பேற்றார். 1993ம் ஆண்டில் அருட்தந்தை என்.சி.அருள்வரதன் பங்குத்தந்தையாக ஆயரால் அனுப்பப்பட்டார். அவரைத்தொடர்ந்து அருட்தந்தை T.I.சந்திரா அடிகள் பங்குத்தந்தையானார். சந்திரா அடிகள் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் 2000ம் ஆண்டு வெசாக் தினத்தன்று மட்டக்களப்புக்கு வெசாக் கொண்டாட்டம் பார்ப்பதற்காக ஆயித்தியமலையிலிருந்து பிள்ளைகளை அழைத்து வந்த போது அப்பிள்ளைகளும் அவரும் கண்ணிவெடியில் சிக்குண்டு ஆயித்தியமலையைச் சேர்ந்த 10 கத்தோலிக்க சிறுவர்களும் நாவற்குடாவைச் சேர்ந்த ஒரு வாய்பேச முடியாத கத்தோலிக்க வாலிபனும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கப் பொலிஸ் அதிகாரியும் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர். சந்திரா அடிகளாரும் படுகாயமடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் அருட்தந்தை டொமினிக் சாமிநாதன் அவர்கள் மறைமாவட்ட நிதிப்பொறுப்பாளராக இருக்கும் போது சிலகாலம் ஆயித்தியமலைப்பங்கைப் பராமரித்து, இடிந்து போயிருந்த குருமனையையும் முற்றாகக் கட்டிமுடித்தார். அத்துடன் நெல்லிக்காட்டு புனித பவுல் ஆலயத்தையும் பவுலின் 2000 ஆண்டு ஜூபிலி வேளையில் கட்டி முடித்தார். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களும் துணை ஆயர் பொன்னையா ஜோசப் அவர்களும் ஆசீர்வதித்து ஜூபிலி ஆண்டைச் சிறப்பித்தனர்.

பின்னர் அருட்தந்தை அம்புறோஸ் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்தார். அவருக்குப்பின் அருட்தந்தை டன்ஸ்ரன் அவர்கள் சிறிது காலம் பணிபுரிந்தார். அவருக்குப்பின் அருட்தந்தை ஜொனத்தன் அடிகள் சில காலம் பங்குத்தந்தையாகப் பணி புரிந்தார். இவரைத் தொடர்ந்து அருட்தந்தை திருச்செல்வம் அடிகள் ஆயித்தியமலை-புல்லுமலை பங்குத் தந்தையாகக் கடமையாற்ற அனுப்பப்பட்டார். இவர் காலத்தில் கல்வாரி புனரமைக்கப்பட்டு அதற்குக்கூரையிடப்பட்டது. ஆலய முன்றலிலும் ஒரு சிறு பாதுகாப்புக்கூரை போடப்பட்டது. அவருக்குப்பின் அருட்தந்தை ரமேஸ் கிறிஸ்ரி அடிகளும் சில காலம் பணிபுரிந்தார். இதன் பின்னர்  அருட்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் அடிகள் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்தார். 

இதன் பின்  அருட்தந்தை தங்கத்துரை யூலியன் வதிவிடக்குருவாக பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து ஜினோ சுலக்சன் புதிய பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பின் புதிய வதிவிடக்குருவாக அன்டனி டிலிமா பொறுப்பேற்று தற்போது இருதராஜ் ஜெமில்டன் பங்குத்தந்தையாக கடமையாற்றி வருகின்றார்.

என்னால் முடிந்த வரை  பல இடங்களில் தேடி டோமிக் சாமிநாதன் அவர்கள் எழுதிய "எழுவான்" மலரில் இருந்து தேடி எழுதியுள்ளேன். பிழைகள் இருந்தால் மன்னித்து திருத்தி அமைத்துக் கொள்வோம் மீண்டும் சொல்கின்றேன் ஆவணப்படுத்தல் முக்கியம். மற்றுமொரு ஆலயத்தை பார்க்கும் வரை.....




Comments