ஆயித்தியமலை சதா சகாய அன்னை திருத்தலம் உருவாக்கத்தில் Fr.நோபட் ஒக்கஸ், Fr ஜோஜ் வம்பேக் ஆகியோரின் பங்கு....... (பகுதி-01)

 ஆயித்தியமலை சதா சகாய அன்னை திருத்தலம் உருவாக்கத்தில் Fr.நோபட் ஒக்கஸ், Fr ஜோஜ் வம்பேக் ஆகியோரின் பங்கு....... (பகுதி-01)

தற்போது மட்டக்களப்பு மறை மாநிலத்தில் விழாக் கோலம் பூண்டிருக்கும் ஆயித்தியமலை சதா சகாயமாதா திருத்தலம் ஆரம்பம் தொடக்கம் இன்று  வரையிலான விடயத்தை உங்களுடன் பகிர ஆசைப்படுகின்றேன். இதை இன்று எழுதுவதற்கு தூண்டு சக்தியாக இருந்தது மறைந்த மட்டக்களப்பின் சொத்தாகவும், பல குருக்களை உருவாக்கிய அருட்தந்தை டோமினிக் சாமிநாதன் அவர்களுக்கு சமர்பனமாக எழுதுகின்றேன்.

பல கோடி வேண்டுதல்களை யார் கேட்டாலும் வழங்கி வரும் அற்புத அன்னையாகிய சதா சகாய மாதாவின் வேண்டுதல்களில் வெற்றி கொண்ட நான் மட்டு மறை மாநிலத்தில் அவரின் ஆலயம் உருவாக்கப்பட்டதை சொல்ல துடிக்கின்றேன்..... 

இலங்கையிலேயே சதாசகாயமாதா பெயரால் நிறுவப்பட்ட முதலாவது தேவாலயமாக ஆயித்தியமலை புனித சகாய மாதா ஆலயம் விளங்குகின்றது.  இது அன்று தொடக்கம் இன்று வரை ஒரு யாத்திரைத் தலமாக திகழ்கின்றது என்றால் அது மிகையாகாது. இலங்கையின் சகல பாகங்களிலும் இருந்து யாத்திரிகர்கள் இங்கு வந்து செல்லுவது  வழக்கமாகும். இலங்கையில்  அசாதாரண சூழ்நிலைகள் நிலவிய காலங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து யாத்திரிகர்கள் வருவது தடைப்பட்டிருந்தது.

இவ்வாலயத்தினை உருவாக்குவதில் அருட்தந்தை நோபட் ஒக்கஸ் அடிகளாருக்கும், அருட்தந்தை ஜோஜ் வம்பேக் அடிகளாருக்கும் பெரும் பங்குள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். நோபட் ஒக்கஸ் அடிகளார் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்னர் மட்டக்களப்பு  தாண்டவன்வெளி பங்கிற்குத் துணைக்குருவாக அனுப்பப்பட்டார். அங்கு பங்குத் தந்தையாக அருட்தந்தை லாசரஸ் அடிகள் கடமையாற்றி வந்தார். அவ்வேளை தாண்டவன்வெளி பங்கு ஒரு கோவிலை மட்டும் கொண்டதாகவே காணப்பட்டது.  தாண்டவன்வெளி  பங்கில் இரு குருக்கள்  பணிசெய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை  பங்குக் குருவாகிய அருட்தந்தை லாசரஸ் தினமும் திருப்பலியினை காலையில் ஒப்புக்கொடுப்பார்.  மாலை திருப்பலி ஒப்புக்கொடுப்பது இல்லை. அத்துடன் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் முறையும் அப்போது அமுலுக்கு வரவில்லை. இதனால் அருட்தந்தை நோபட் ஒக்கஸ் அடிகளாருக்கு பங்கு வேலைகள் இல்லாதிருந்தது. 

நோபட் ஒக்கஸ் அடிகளாரின் தந்தையார் ஆயித்தியமலையில் இருந்த ஆயரின் பொன்னாங்காணிச் சேனை வயல் காணிக்குப் பொறுப்பாளராகவும், பராமரிப்பாளராகவும் அவ்வேளை இருந்தார். அங்கே பலகையினால் கட்டப்பட்ட ஒரு இருமாடிக் கட்டிடம் தங்குவதற்குச் சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. அருட்தந்தை நோபட் ஒக்கஸ் அடிகளார் அடிக்கடி தமது தந்தையாரின் வாடிக்குச் சென்று வருவது வழமை.

ஒரு நாள்  நோபட் ஒக்கஸ் அடிகளார் தன் தந்தையார் தங்கி இருந்த வாடியிலேயே திருப்பலி ஒன்றை ஒப்புக் கொடுத்தார். அதுவே ஆயித்தியமலைப் பகுதியில் ஒப்புக்கொடுக்கப்பட்ட முதலாவது திருப்பலியாக பதிவுக்கு வந்தது.  நோபட் ஒக்கஸ் அடிகளார் அங்கிருந்த தனது தந்தையாருக்கும்  அவரின் கீழ் வேலை செய்த சில கத்தோலிக்கர்களுக்கும் செய்த பணியே முதலாவது செய்யப்பட்ட அருட்பணியுமாகும்.

பிற்காலத்தில் லாசரஸ் அடிகளாருக்குப் பதிலாக வம்பேக் அடிகளார் தாண்டவன்வெளிக்குப் பங்குத் தந்தையாக வந்த வேளை அருட்தந்தை நோபட் ஒக்கஸ் அடிகளாரும் அங்கிருந்து மாற்றலாகி வேறு பங்கிற்குச் சென்று விட்டார். இவை நடைபெற்றது1950ம் ஆண்டளவிலாகும்.

 இவ்வேளையிலே உன்னிச்சையில் குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் அப்பகுதியெங்கும் குடியேற்றப்பட்டனர். இவர்களில் பல கத்தோலிக்கக் குடும்பங்களும் அடங்கும். முக்கியமாக வீச்சுக்கல்முனை, பெரியதுறை, தன்னாமுனை ஆகிய பகுதிகளிருந்து பல கத்தோலிக்க குடும்பங்கள் உன்னிச்சை, பள்ளச்சேனை, ஆயித்தியமலை ஆகிய பகுதிகளில் சென்று குடியேறினர். 

இச்சமயத்தில் அப்பகுதியிலே (P.W.D. Overseer) வீதிகள் பராமரிக்கும் உத்தியோகஸ்தராக திரு.குருஸ் அவர்கள் இருந்தார்.  இவர் ஒரு விசுவாசம் நிறைந்த நல்ல கத்தோலிக்கர். இவருக்கும் வம்பேக் அடிகளாருக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்து வந்தது. இதனால் ஆயித்தியமலையைப் பராமரிக்கும் பொறுப்பும் அருட்தந்தை வம்பேக் அடிகளார் வசம் வந்தது. அக்காலத்திலே ஆயித்தியமலையில் ஒரு ஆலய வசதியும் இல்லாத காரணத்தினால் ஒரு ஆலயம் அமைப்பதற்குக் காணி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவ்வேளை அங்கு பணிபுரிந்த திரு.குருஸ் அவர்கள் தனது பணிமனைக்கு எதிர்ப்புறமாகப் பிரதான வீதி ஓரத்திலே இருந்த காட்டுப்பகுதியை ஆலயம் அமைக்க அளித்தார். இக் காணியிலே அருட்தந்தை வம்பேக் அடிகளார் ஒரு ஓலைக் குடிலை அமைத்து அதிலே சதாசகாய அன்னையின் படம் ஒன்றை 1956ம் ஆண்டு  ஞாயிறு அன்று நிறுவினார். அந்த முதலாவது திருப்பலிக்கும் திருநாளுக்கும்  டொமினிக் சாமிநாதன் (பின்னாளில் அருட்தந்தையாகியவர்) பீடப்பணியாளருள் ஒருவராகச் சென்றிருந்தார்.

ஆயர் இக்னேசியஸ் கிளெனி ஆண்டகை அவர்கள் திருவிழாத்திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். பிற்காலத்தில் அச்சிற்றாலயத்திற்கு முன்னால் வீதியின் மறுபக்கம், திரு.குருஸ் அவர்களுடைய அலுவலகமாக விளங்கிய வீடும் அதைச்சார்ந்த நிலமும் குருமனை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டு வம்பேக் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.

தொடரும்......

Comments