வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல்......

 வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல்......

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டி வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது. மைதானத்தில் மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இடம்பெற்றபோது மைதானத்தின் அருகில் காணப்பட்ட நீர்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.

மாணவர்கள் விழுந்ததை அவதானித்தவர்கள் கடமை இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர் அவ்விடத்திற்கு வருகை தந்து பல்கலைக்கழக மாணவர்கள், ஊர் மக்கள் ஆகியோருடன்  இணைந்து குறிந்த மாணவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இரு மாணவர்களையும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும்,  அவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்கு முன்பே இறந்துள்ளார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சம்பவத்தை அறிந்து பல்கலைக் கழகத்திற்கு சென்ற வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன்  மீதும், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அவ்விடத்தில் பல்கலைகழக மாணவர்கள் குவிந்திருத்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.

பல்கலைகழக மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் துணைவேந்தரை பாதுகாப்பாக பல்கலைகழகத்திற்கு அழைத்து சென்றதுடன்,  பூவரசங்குளம் பொலிஸார் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தார்.

குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயது மாணவர்களே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments