மட்டக்களப்பு மாவட்டத்தில் கனரக வாகன இயக்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான விசேட கலந்துரையாடல்......

 மட்டக்களப்பு மாவட்டத்தில் கனரக வாகன இயக்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான விசேட கலந்துரையாடல்......

மட்டக்களப்பு மாவட்டத்தில் கனரக வாகன இயக்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) இடம் பெற்றது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ சந்திரகாந்தனின் பணிப்புரையின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக கனரக வாகன இயக்குனர்ளுக்கான நிகழ்ச்சித்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்பு செயலாளர் மாணிக்கவாசகர் தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இயந்திரி குசான் டிவிந்த மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன் கலந்து கொண்டார்கள்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவில் தொழிலின்றி காணப்படும் இளைஞர்களின் தொழில் வாய்ப்பை அதிகரிப்பதற்காக அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் ஊடாக இக்கற்கை நெறியை நாடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. அரச சார்பற்ற அம்கோர் (AMCOR) நிறுவனத்தின் ஆதரவுடன் இத்திட்டம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் பயிற்சி நெறிகளை சிறந்த நிபுணர்களினால் வழங்கப்படுகின்றமையினால் பயிற்சியை பூர்த்தி செய்கின்ற நபர்கள் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
கனரக வாகன இயக்குனர்களுக்கான கற்கை நெறிகள் வெளிமாவட்டங்களில் இடம் பெற்று வரும் நிலையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தனின் பணிப்புரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திருப்பெரும்துறையில் வார நாட்களில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், அம்கோர் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments