'சர்வதேச நீதிப்பொறிமுறையில் எங்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடு': மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்......

 'சர்வதேச நீதிப்பொறிமுறையில் எங்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடு': மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்......

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று (30) 'சர்வதேச நீதிப்பொறிமுறையில் எங்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடு' என்ற தொனிப்பொருளில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டக்களப்பில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் ஏற்பட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கல்லடி பாலத்திலிருந்து பேரணியானது ஆரம்பமாகி, பிரதான வீதியூடாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள, படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபி வரையில் சென்றது.

அங்கு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிய கொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தலைமையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் சுடரேற்றப்பட்டு, அக வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அங்கு நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து  கொண்டவர்கள் தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சர்வதேச நீதிகோரிய பல்வேறு பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும், மகளிர் அமைப்புக்கள், சிவில் சமூக செயற்பாட்டளார்களும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்திருந்தனர்.

போராட்டத்தின் இறுதியில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டதை தொடர்ந்து அதனை ஐக்கிய நாடுகள் சபை உட்பட தூதரகங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான கடிதங்களும் கையளிக்கப்பட்டன.

Comments