நீர் வற்றியதால் வெளிப்படும் மவுஸ்சாகலை புனித ஸ்தலங்கள்......

 நீர் வற்றியதால் வெளிப்படும் மவுஸ்சாகலை புனித ஸ்தலங்கள்......

நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை விநியோகிக்கும் லக்ஷபான நீர் மின் நிலைய வளாகத்திற்கு சொந்தமான மவுஸ்சாகலை நீர்த்தேக்கம் தேசிய நீர்மின்சார அமைப்புக்கு சொந்தமான பிரதான நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இந்த நீர்த்தேக்கத்தின் அளவு 1790 ஏக்கர். நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 93800 ஏக்டையர் அடியாகும்.
நீர்த்தேக்க அணையின் உயரம் 135 அடியாகும். மத்திய மலையகத்தில் அமைந்துள்ள மவுஸ்சாகலை நீர்த்தேக்கமானது பிரதானமாக லக்க்ஷபான நீர்மின் நிலைய வளாகத்தின் 04 நீர் மின் உற்பத்தி நிலையங்களான கெனியன், லக்க்ஷபான, நவ லக்க்ஷபான, கலுகல மற்றும் பொல்பிட்டிய ஆகியவற்றிற்கு நீரை வழங்குகிறது.
மவுஸ்சாகலை நீர்த்தேக்கமானது களனி கங்கையின் இரண்டு கிளை நதிகளான மஸ்கெலியா ஓயா மற்றும் சீதங்குள ஓயா மற்றும் இரண்டு நீர்வீழ்ச்சிகளான மரே மற்றும் காட்மோர் ஆகியவற்றால் நிரப்பப்படுகிறது.
மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கத்தின் சிறப்பு என்னவெனில் பழைய மஸ்கெலியா நகரின் இடத்தில் இந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வறண்ட காலங்களில், இந்த பழமையான மஸ்கெலியா நகர் மற்றும் அங்கு இருந்த பழமையான ஸ்ரீ சண்முகநாதன் ஆலயம், விநாயகர் ஆலயம், புத்தர் சிலை அரசமர பகுதி இஸ்லாமிய மசூதி குறியீடுகள் பல மீண்டும் தோன்றுவதையும், காணலாம். அவ்வாறான காலப் பகுதியில் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அங்கு பொழுது போக்குக்காக அதிக அளவில் படை எடுத்து செல்வதுண்டு. அதே போல் மழை காலத்தில் இவைகள் நீரில் மூழ்குவதையும் காணலாம்.
நீர் வற்றியவுடன், இந்த நீர்த்தேக்கத்தின் கீழ் இருந்த அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மிக அழகான காட்சியாக மீண்டும் தோன்றும். மேற்கில் உள்ள சிவனடி பாத மலையின் காட்சியால் அதன் அழகு மேலும் அதிகரிக்கிறது. இங்குள்ள மத வழிபாட்டுத் தலங்களில், ஸ்ரீ சண்முகநாதர் இந்து ஆலயம் 1917 ஆம் ஆண்டு கருங்கல்லால் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
இக்கோயில் இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த சிறப்பக் கலைஞர்களால் கட்டப்பட்டது. மேலும் பௌத்த விகாரை அமைந்துள்ளது. இஸ்லாமிய மசூதி மற்றும் கத்தோலிக்க தேவாலயமும் என அருகிலேயே நான்கு மத வணக்கஸ்தலங்கள் அமைந்திருந்தது.
இந்த சர்வமத புனித ஸ்தலங்கள் நீரில் இருந்து வெளிப்பட்டதையடுத்து, உள்ளூர் பௌத்த மற்றும் இந்து பக்தர்களும் பாதுகாப்பதுடன் இந்து ஆலயங்கள் மற்றும் விகாரைகளுக்குச் சென்று பூஜைகள் செய்து அன்னதானம் வழங்குவது விசேட அம்சமாகும்

Comments