தொழிற்சந்தைக்கான வாய்ப்பை ஏற்படுத்த மாபெரும் கண்காட்சி......
மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட செயலக தொழில் நிலையம், அக்ஷன் யுனிற்றி லங்கா ஆகியவை இணைந்து மாவட்டத்தில் மாபெரும் தொழில் கல்விச் சந்தையை நடாத்தின. மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில், மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுமார் 30 இற்கு மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வழங்கும் நிறுவனங்கள், அரச தனியார்துறை தொழிற் கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டன.
சுமார் 1000ற்கு மேற்பட்ட உடனடித் தொழில் வாய்ப்புக்களோடு இந்நிறுவனங்கள் தொழிற் சந்தையில் கலந்து கொண்டிருந்தன. நிகழ்வில் மாவட்ட உதவிச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், நிகழ்வை இணைப்பாக்கம் செய்து அனுசரணை வழங்கிய அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் வி.சுதர்ஷன், நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன், மாவட்ட சமூக சேவை அலுவலர் சந்திரகலா கோணேஸ்வரன், மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் தருநர்கள், உள்நாட்டு வெளிநாட்டு தொழில் தேடுவோர் உயர்தர, பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொழில் சந்தை நிகழ்வு இளைஞர் யுவதிகளுக்கான சிறுவர் நிதியத்தின் நிதி அனுசரணையோடு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு 4 வீதமாக இருந்த தொழிலற்றோர் விகிதம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 7.2 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் மொத்த தொழிலற்றோர் வீதம் 22 ஆக உள்ளதாக மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
Comments
Post a Comment