பாபர், மதீஷவின் பிரகாசிப்புகளுடன் கொழும்பு அணிக்கு வெற்றி.....

 பாபர், மதீஷவின் பிரகாசிப்புகளுடன் கொழும்பு அணிக்கு வெற்றி.....

இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது போட்டியில் பி லவ் கண்டி அணியை எதிர்கொண்ட கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. 

நிரோஷன் டிக்வெல்ல தலைமையிலான கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி முதல் போட்டியின் தோல்வியை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் களமிறங்கியிருந்தது. நாணய சுழற்சியின் வெற்றியை தக்கவைத்திருந்த கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. 

துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்கு மோசமான ஆரம்பம் கிடைத்திருந்தது. அணித்தலைவர் நிரோஷன் டிக்வெல்ல 4 ஓட்டங்களுடன் முதல் ஓவரில் வெளியேறினார். தொடர்ந்து பெதும் நிஸ்ஸங்க 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பாபர் அஷாம் ஓட்டங்களை வேகமாக குவிக்காவிட்டாலும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் நுவனிந்து பெர்னாண்டோ தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 ஓட்டங்களை பெற்றிருந்தபோது வெளியேறினார். 

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய வீரர்களில் பாபர் அஷாம் மாத்திரம் அதிகபட்சமாக 52 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் இசுரு உதான 3 விக்கெட்டுகளையும், மொஹமட் ஹஸ்னைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததோடு, சற்று மந்தமான தன்மையையும் கொண்டிருந்தது. எனவே இந்த ஆடுகளத்தில் சற்று சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பி லவ் கண்டி அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை காட்டியது. தனுக தபரே மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் நசீம் ஷாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, தினேஷ் சந்திமால் மதீஷ பதிரணவின் பந்தில் போவ்ல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 

தொடர்ச்சியான இடைவெளிகளில் இணைப்பாட்டங்கள் கட்டியெழுப்பப்படாமல் கண்டி அணி விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. இதில் அதிகபட்சமாக அஞ்செலோ மெதிவ்ஸ் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஏனைய வீரர்களில் சர்பராஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களை பெற்றார். 

மதீஷ பதிரண அற்புதமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்க்க, மறுமுனையில் நசீம் ஷா மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். எனவே முற்று முழுதாக துடுப்பாட்டத்தில் தடுமாறிய கண்டி அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 

எனவே தங்களுடைய இரண்டாவது போட்டியில் முதல் வெற்றியை கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 27 ஓட்டங்களால் தக்கவைத்துக்கொண்டதுடன், பி லவ் கண்டி அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது. 

Comments