தம்புள்ளையை சுபர் ஓவரில் வீழ்த்தியது கோல் டைட்டன்ஸ்.....

 தம்புள்ளையை சுபர் ஓவரில் வீழ்த்தியது கோல் டைட்டன்ஸ்.....

லங்கா பிரீமியர் லீக்கில்  (31) நடைபெற்ற தம்புள்ள அவுரா அணிக்கு எதிரான 2ஆவது லீக் போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி சுபர் ஓவரில் வெற்றியீட்டி இம்முறை போட்டித் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. 

அணித் தலைவர் தசுன் ஷானகவின் சகலதுறை ஆட்டம், பானுக ராஜபக்ஷவின் அபார துடுப்பாட்டம் என்பவை கோல் டைட்டன்ஸ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.  

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கோல் டைட்டன்ஸ் அணிக்கு வழங்கியது. 

அதன்படி களமிறங்கிய கோல் டைட்டன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லசித் குரூஸ்புள்ளே 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த ஷெவோன் டேனியல் – பானுக ராஜபக்‌ஷ ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் ஷெவோன் டேனியல் 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பானுக ராஜபக்‌ஷவும் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைச் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  

அதனைத்தொடர்ந்து வந்த டிம் சீபேர்ட் 14 ஓட்டங்களுடனும், சகிப் அல் ஹசன் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இறுதியில் அணித்தலைவர் தசுன் ஷானக 21 பந்துகளில் 2 பௌண்டறிகள், 4 சிக்ஸர்கள் என 42 ஓட்டங்களை எடுத்து அசத்தினார். இதன் மூலம் கோல் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. 

பந்துவீச்சில் ஷாநவாஸ் தஹானி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், பினுர பெர்ணான்டோ, மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.  

181 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அவுரா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இணைந்த தனன்ஜய டி சில்வா – குசல் பெரேரா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.  

இதில் இருவரும் அரைச் சதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனன்ஜய டி சில்வா 43 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த சதீர சமரவிக்ரம, ரவிந்து பெர்னாண்டோ ஆகியோர் தலா 13 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, இறுதிவரை போராடிய அலெக்ஸ் ரொஸ் 39 ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்த்தார்.  இதனால் தம்புரா அவுரா அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை எடுக்க போட்டி சமநிலையில் முடிந்தது. பந்துவீச்சில் தசுன் ஷானக 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  

எனவே, போட்டி சமநிலையானதால் சுபர் ஓவர் வழங்கப்பட்டது. சுபர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கோல் டைட்டன்ஸ் அணி 11 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. பானுக்க ராஜபக்ஷ ஒரு சிக்ஸர், ஒரு பெண்டறியை அடித்து அந்த அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.   போட்டியின் ஆட்டநாயகனாக கோல் டைட்டன்ஸ் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவு செயற்பட்டார்.

Comments