மட்டக்களப்பில் 4 வீடுகளை உடைத்து திருடிய இருவர் கைது. தங்க ஆபரணம், பணம், கையடக்க தொலைபேசிகள் மீட்பு......

 மட்டக்களப்பில் 4 வீடுகளை உடைத்து திருடிய இருவர் கைது. தங்க ஆபரணம், பணம், கையடக்க தொலைபேசிகள் மீட்பு......



மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம், தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை திருடி வந்த  இரண்டு பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்துள்ளதுடன், திருடப்பட்ட தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜீ.எம்.பி.ஆர்.பண்டார தெரிவித்தார்.

குறித்த பகுதியில் அண்மையில் பூட்டியிருந்த வீடு ஒன்றையும் மற்றும் 3 வீடுகளின் கதவை  இரவு வேளையில் உடைத்து உள்நுழைந்து  அங்கிருந்து தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் திருட்டுபோயுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்கா தலைமையிலான பொலிஸ் சாஜன் பி.எஸ்.ஹகுமான், பி.எஸ்.அருன, வசந்த, சம்பத் ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுவந்த விசாரணையின் அடிப்படையில் திருடர்களை அடையாளம் கண்டுகொண்டனர்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று நாவக்கேணி பிரதேசத்தில் தலைமறைவாகி இருந்த 30 வயது மற்றும் 32 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள், கையடக்க தொலேபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 21 ம் திகதிவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்

Comments