நிலவும் கடும் வறட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர்வரை பாதிப்பு.......

 நிலவும் கடும் வறட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர்வரை பாதிப்பு.......

நாட்டில் நிலவும் கடும் வறட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8 ஆயிரத்தி 892 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்தி 508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் செங்கலடி பிரதேச செயலக பிரிவில் 2561 குடும்பங்களைச் சேர்ந்த 8805 நபர்கள் அதிக பட்சமாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலக பிரிவில் 2161 குடும்பங்களைச் சேர்ந்த 6856 நபர்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 1729 குடும்பங்களைச் சேர்ந்த 6300 நபர்களும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் 1438 குடும்பங்களைச் சேர்ந்த 4341 நபர்களும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் 853 குடும்பங்களைச் சேர்ந்த 2681 நபர்களும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 525 நபர்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அனர்த்த நிவாரண சேவை திணைக்களத்தினால் கடந்த மே மாதம் முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாதின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தினூடாக அவ்வப்பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையின்கீழ் பிரதேச சபை பவுசர் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments