மட்டக்களப்பு மாவட்டத்தில் நெசவு உற்பத்தியை மேம்படுத்த 06 நாள் பயிற்சி பாசறை..
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெசவு உற்பத்தியை மேம்படுத்த ஐக்கிய நாட்டு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் 06 நாள் கொண்ட பயிற்சி பாசறையானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கணேசமூர்த்தி தலைமையில் (23) இடம் பெற்றது.
ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்டத்தின் மீளக்குடியமர்ந்த மக்களின் சமூக ஒன்றிணைவுக்கான உதவி எனும் தொனிப்பொருளில் இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
நெசவு உற்பத்தியை மேம்படுத்த ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்டத்தின் நிதி அனுசரனையில் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுவரும் நபர்களுக்கான இவ் பாசறை பிரண்டினா (Brandina) நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆதித்தி கைத்தறி நிலையத்தில் இடம் பெறுகின்றது.
நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களிற்கு நெசவு தொடர்பான புதிய தொழில் நுட்ப ஆலோசனைகள் மற்றும் அவர்களிற்கு தேவையான வழிகாட்டல்கள் நிபுணர்களினால் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதித்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகள் வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நிய செலாவணியை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஐக்கிய நாட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட கிழக்கு மாகாண செயற்திட்ட விசேட நிபுணர் பார்த்தீபன் குலசேகரம் மற்றும் பிரண்டினா நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் குஷாந் பெனடிக், ஆதித்தி நிறுவனத்தின் பணிப்பாளர் கீதா சுதாகரன், வளவாளர்கள், கைத்தறி நெசவு தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment