ஆயித்தியமலை சதா சகாய அன்னை திருத்தத்தை பொறுப்பேற்றார் டொமினிக் சாமிநாதன்........ (பகுதி-02)

 ஆயித்தியமலை சதா சகாய அன்னை திருத்தத்தை பொறுப்பேற்றார் டொமினிக்  சாமிநாதன்........  (பகுதி-02)

வம்பேக் அடிகளாரைத் தொடர்ந்து தாண்டவன்வெளிப் பங்குத்தந்தையாக வந்த ஜேக்கப் அடிகளாரும்  ஆயித்தியமலையைத் தொடர்ந்து பராமரித்து வந்தார். பிற்காலத்தில் 1968 ஜூன் மாதம் தொடக்கம் அருட்தந்தை டொமினிக்  சாமிநாதன் தாண்டவன்வெளிப் பங்கில் அருட்தந்தை ஜேக்கப் அடிகளாருடன் துணைக்குருவாக இணைந்து பணியாற்றினார். 

ஜேக்கப் அடிகளார் காலத்திலே இப்போது இருக்கும் ஆலயம் புதிய ஒரு ஆலயமாகக் கட்டப்பட்டது. இக்காலத்திலே இவ்வாலயத்திற்குக் கொழும்பில் இருந்த தமிழ், சிங்களக் கத்தோலிக்கர்கள் தாராளமாக நிதியுதவி செய்தனர். வருடா வருடம் திருநாள் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில்  இருந்து ஆயித்தியமலைக்கு வரத்தொடங்கினர். இதனால் வழிபாடுகள் யாவும் தமிழிலும், சிங்களத்திலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இக்காலத்திலேயே இது யாத்திரைத் தலமாக அரசினால் பதிவு செய்து அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

 பின்பு சிறிது காலம் புளியந்தீவுப் பங்குத் தந்தையின் பரிபாலனத்தின் கீழ் இத் தலம் கொண்டுவரப்பட்டுத் தாபரிக்கப்பட்டு வந்தது. ஜேக்கப் அடிகளாரே அப்போது புளியந்தீவுப் பங்குத்தந்தையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருக்குப் பின் ஆயித்தியமலை, புல்லுமலைப் பங்குத் தந்தையின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அப்போது அருட்தந்தை நோபட் ஓக்கஸ் அடிகளார் புல்லுமலைப் பங்குத் தந்தையாக இருந்தார். இக்காலத்திலே தான் அருட்தந்தை தியாகராஜா அடிகளார் மறை மாவட்ட காணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்நியமனத்துடன் தியாகராஜா அடிகளாரும் புல்லுமலைக்குச் சென்று நோபட் அடிகளாருடன் இருந்து கொண்டே தனது கடமைகளையும் நிறைவேற்றி வந்தார். ஆயித்தியமலையில் இருந்த ஆயரின் காணியும் (பொன்னாங்காணிச் சேனை) தியாகராஜா அடிகளாரின் கண்காணிப்பின் கீழேயே வந்தது. சொற்பகாலத்தின் பின் தியாகராஜா அடிகளார் தனது இருப்பிடத்தைப் புல்லுமலையிலிருந்து ஆயித்தியமலைக்கு மாற்றிக் கொண்டார். இதை அவதானித்த எல்.ஆர். அன்ரனி ஆயர் அவர்கள் ஆயித்தியமலையை ஒரு தனிப் பங்காகப் பிரித்துத் தியாகராஜா அடிகளாரையே அதன் பங்குத் தந்தையாகவும் நியமித்தார். அருட்தந்தை தியாகராஜா 1976ம் ஆண்டு வரை ஆயித்தியமலைப் பங்குத்தந்தையாகக் கடமை புரிந்தார்.

அவரைத் தொடர்ந்து அருட்தந்தை எல்.கே.மரியதாசன் அடிகளார் பங்குத்தந்தையாக 1976ல் நியமிக்கப்பட்டார். அருட்தந்தை மரியதாசன் அடிகளார் அக்காலத்து இளம் குருக்கள் மத்தியிலே மிகவும் துடிப்புடன் செயற்பட்டவர். இரண்டாம் வத்திக்கான் சங்கப் படிப்பினைகள் மட்டில் அவர் மிக்க ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்தார். எனவே சங்கப் படிப்பினைகளுக்கு ஏற்ப திருச்சபையில் பண்பாட்டு மயமாக்கலை நடைமுறைப்படுத்துதலில் அதீத அக்கறையுடன் அவர் செயற்பட்டார்.

ஆனால் அன்றைய கத்தோலிக்க மக்கள் உடனடியாக அம்மாற்றங்களை உள்வாங்கக் கூடியவர்களாக இருக்கவில்லை. இலத்தீனில் இருந்து தமிழில் திருப்பலி மாற்றம் பெற்றவேளை அதை மட்டக்களப்பில் எதிர்த்தவர்களுள் கல்வியறிவு பெற்றிருந்தவர்களும் அடங்குவர். தமிழில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியைத் தவிர்த்து வீட்டிலேயே மக்கள் முடங்கி இருந்தனர். இருந்த போதிலும்  புனித மிக்கேல் கல்லூரி சிற்றாலயத்தில் இலத்தீன் மொழியில் திருப்பலிக்கள் நடைபெற்று வந்தன, அதனை பார்ப்பதற்காக சிலர்  சென்றனர். இத்தகைய மாற்றங்களுக்கான விளக்கங்கள் அவர்கள் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் ஏற்கத் தக்க வகையிலும் அமைவதற்கான அணுகுமுறைகளில் சில குறைபாடுகளும் நிலவின.

அருட்தந்தை மரியதாஸ் பல புதிய விடயங்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருந்தமையால் மேற்குறித்த சூழல் காரணமாக சென்ற இடமெல்லாம் எதிர்ப்புக்களையே சம்பாதித்தவராக விளங்கினார். ஆயித்தியமலையும் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. இது ஆயருக்குப் பெரிய சங்கடமாக இருந்தது. மக்களுக்கும் அடிகளாருக்குமிடையிலான பிரச்சனையை தீர்க்க புதிதாக ஒரு குருவானவரைப் பொறுப்பேற்கச் செய்ய ஆயர் முயற்சித்தார். 

இதன் போது  ஆலயத் திருநாளும் அண்மித்தமை எண்ணி டொமினிக் சாமிநாதன் அடிகளிடம் 1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆயித்தியமலைப் பங்கினையும் பராமரிக்கும் பொறுப்பினை ஒப்படைத்தார். 

தொடரும்....

Comments