யாழில் நடாத்தப்படும் தனிப்பட்ட குழு வகுப்புக்களையும் கட்டுப்படுத்த ஆயத்தமாகும் அரச அதிபர்.....

 யாழில் நடாத்தப்படும் தனிப்பட்ட குழு வகுப்புக்களையும் கட்டுப்படுத்த ஆயத்தமாகும் அரச அதிபர்.....

யாழ்.மாவட்டத்தில் நடாத்தப்படும் குழு வகுப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றையும் ஒழுங்குக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில், நடாத்திய கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அதன் போது, தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புக்ளை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியத்திற்குப்பின்னர் வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்குமாறும், அதேவேளை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் தரம் 9 ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பிப்பதால் அம் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலையங்கள் வகுப்புக்களை நிறுத்தும் அதே வேளை பிரத்தியேக வகுப்புக்கள் இடம்பெற்று வருவதை கட்டுப்படுத்துமாறும் அந்நிறுவனங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டன.

அதனை அடுத்து, ஏழு நாட்களும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைளில் ஈடுபடுவதால் ஏற்படும் உளபாதிப்பை குறைக்கும் நோக்கிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும், பிள்ளைகளின் உளசமூக செயற்பாட்டினை மேம்படுத்தவும் அறநெறிகல்வியினை ஊக்குவிக்கும் முகமாகவும் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களை சமூக விருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி ஊக்குவிக்கும் முகமாகவும் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கேற்ப வகுப்புக்களை மீள ஒழுங்குபடுத்தி செயற்படுமாறும் பாடசாலை நேரங்களுக்கு புறம்பாக மேற்படி தீர்மானங்களுக்கு கட்டுப்படாத குழு வகுப்புக்கள் தொடர்பாக எதிர்வரும் காலத்தில் உரிய நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் மாவட்ட செயலர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், மேலதிக மாவட்ட செயலர் (காணி), யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், தனியார் கல்வி நிலைய இயக்குநர்கள், யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்புசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Comments