நீதித்துறை தொடர்பான சரத் வீரசேகரவின் உரைக்கு கடும் எதிர்ப்பு: கிழக்கு சட்டத்தரணிகளும் கண்டனம்.

 நீதித்துறை தொடர்பான சரத் வீரசேகரவின் உரைக்கு கடும் எதிர்ப்பு: கிழக்கு சட்டத்தரணிகளும் கண்டனம்.

நீதித்துறையை அவமதிக்கும் வகையில், தனது நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி கருத்துக்களை வெளியிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கமும் தமது கண்டனங்களைப் பதிவு செய்தது.

நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிய சட்டத்தரணிகள், இன்று காலை மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத்திற்கு முன்பாக ஒன்று கூடி அமைதியான முறையில் தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இனவாதத்தைத் தூண்டாதே, நீதித்துறையை அச்சுறுத்தாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் சட்டத்தரணிகள் தாங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி பே.பிரேம்நாத் தலைமையில் இந்த கண்ட அமைதி வழி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அம்பாறை கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில், கிழக்கு மாகாண மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி, தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களிற்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசிய சரத் வீரசேகரவிற்கு எதிராக பதாதைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்ட மூத்த மற்றும் இளம் சட்டத்தரணிகள் தாங்கியிருந்தனர்.

Comments