இந்திய ரூபாய் இலங்கையில்..........
இன்று உலகில் எந்தவொரு நாடும் தனித்து முன்னேற முடியாது, உலகில் உள்ள அனைத்து அபிவிருத்தியடைந்த நாடுகளும் பிராந்திய கூட்டாண்மை மூலம் அந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளன, இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்தி இலங்கையின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் வேலைத்திட்டமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் மற்றும் 'இந்திய-இலங்கை பொருளாதார கூட்டாண்மையின் தொலைநோக்குப் பார்வை' குறித்து இன்று (22) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வலியுறுத்திய அமைச்சர், இந்த செயற்பாடுகளை பூரண புரிந்துணர்வுடனும் அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடனும் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி,
இலங்கையின் நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் புரிந்துணர்வு உறவைக் கட்டியெழுப்புவது இரு நாடுகளுக்கும் அதே போன்று பிராந்தியத்திற்கும் மிகவும் நல்லதொரு நிலையாகும் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் மொத்த வளர்ச்சியில் 2/3 ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம். மேலும் இந்தியாவும் சீனாவும் அதில் முன்னிலை வகிக்கும் என்பது எவ்வித விவாதமும் இன்றி சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள உண்மையாகும்.
எனவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய அபிவிருத்தி வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதேஇ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை உற்றுநோக்கினால் அந்நாடுகள் இணைந்து செயற்பட்டதன் காரணமாக முழு ஐரோப்பிய பிராந்தியமும் வளர்ச்சியடைந்தது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான். சீனாவைப் போலவே அமெரிக்கப் பிராந்தியமும் அதே முறையில் அபிவிருத்தியடைந்தது. இந்த அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.
ஜனாதிபதி அண்மையில் இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, பல முக்கிய கலந்துரையாடல்களில் அவர் பங்கேற்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கருடன் கலந்துரையாடிய பின்னர், இந்தியாவின் தலைமை பாதுகாப்பு ஆலோசகருடனும் கலந்துரையாடப்பட்டது.
அதன்பின், ஜனாதிபதி, இலங்கைத்தூதுக்குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த காலத்தில் நாம் சந்தித்த பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா எங்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியது. நிதி நிவாரணம் வழங்கியதோடு குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமைத்துவத்தையும் வழங்கியது.
இந்தக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நாம் நிறைவு செய்ய வேண்டும். அதற்கான இந்தியாவின் ஆதரவை நாங்கள் தொடர்ந்து பெற்று வருகிறோம்.இந்த அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் இந்தியப் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
மேலும், நமது இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நமது பொருளாதார, சமூக மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முதலீடுகள் தேவைப்படுவதுடன் அந்த முதலீடுகளின் ஊடாக சந்தை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்பட்டால், இரு நாடுகளும் பெரும் நன்மைகளைப் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அரசாங்கங்களுக்கிடையில் மாத்திரமன்றி தனியார் துறைகளுக்கிடையிலும் உடன்பாடுகளை எட்டுவதற்குத் தேவையான பின்னணி குறித்து ஆராயப்பட்டது.
இந்திய ரூபாயை இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இங்கு பரிசீலிக்கப்பட்டதுடன், அதற்கான ஏற்பாடுகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் மீண்டும் பணத்தை ஏனைய நாணய அலகுகளுக்கு மாற்றாமல் எளிதாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பளிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்தியாவும் சிங்கப்பூரை இவ்விதம் கையாண்டு இரு நாடுகளும் பெரும் பயன்களை அடைந்துள்ளன.
மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிகச் சிறந்த உறவை எவ்வாறு பேணுவது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.
இப்போது இந்தியாவிற்கும் பலாலி விமான நிலையத்திற்கும் இடையில் தினசரி விமான சேவைகள் உள்ளன. எதிர்காலத்தில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்கவும் நாம் எதிர்பார்த்துள்ள்ளோம். மேலும், உள்நாட்டு விமான சேவைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.
சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் அதற்காக ஒத்துழைப்புடன்செயற்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாத் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் சுற்றுலா கப்பல்சேவையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இது இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு துறையாக இருப்பதுடன் இதன் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இன்று தென்னிந்தியப் பிராந்தியம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை, இலங்கைக்கு பயனளிக்கும் வகையில், துறைமுகங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு நாட்டுத் தலைவர்களும் இனங்கண்டுள்ளனர்.
துறைமுகங்களுக்கு இடையே இந்த உறவுகளை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாட வேண்டும்.
இது குறித்து கலந்துரையாடி விடயங்களை ஆராய்ந்து தீர்மானத்திற்கு வருவது குறித்து தலைவர்கள் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.
இவ்விடயங்கள் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் விரிவாக கலந்துரையாடிய பின்னர், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்மானிப்பதன் அவசியம் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தேசிய மின்சாரத் தேவையில் 70 வீதம் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்டு பூர்த்தி செய்யும் திறன் உள்ளது.
அதன் பிறகு மேலதிகத்தை ஏற்றுமதி செய்ய ஒரு சந்தை வேண்டும். எனவே இதன் மூலம் பாரிய நிதியைப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
நமது சூரிய சக்தி மற்றும் காற்று வலு போன்றவற்றை ஏற்றுமதிக் கைத்தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சூழலை எவ்வாறு உருவாக்குவது தொடர்பில் எமக்குப் பாரிய தேவை உள்ளது. அதுபற்றி இங்கு விரிவாக கலந்துரையாடினோம்.
மேலும், இதன்போது இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாம் கலந்துரையாடினோம்.
Comments
Post a Comment