இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அதிரடி நடவடிக்கை.....
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்களில் நிலவும் குறைபாடுகள், தேவைகள், மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, இலங்கை போக்குவரத்து சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சமுர்த்தி வங்கி, பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றிக்கு சென்று தலைமை அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த உத்தியோகஸ்தர்களுடன் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
வாழைச்சேனை சமுர்த்தி வங்கிக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் மக்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிரமங்களை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆராய்ந்ததோடு, சமுர்த்திக் கொடுப்பணவை பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்குமாறும் குறிப்பிட்டார்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்கு சென்றபோது, பாசிக்குடாவில் உள்ள நட்சத்திர விடுதிகள் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் சபைக்கு அவர்களது மொத்த வருமானத்தில் 1 வீதத்திற்குட்பட்ட திரட்டிய வீத வரியினை இது வரை செலுத்தமல் உள்ளமை தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகமும் சபைக்கு வரி செலுத்தாமல் உள்ளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
பிரிதொரு தினத்தில் இவ்விடயங்கள் தொடர்பில், உள்ளுராட்சி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து தீர்வு பெற்றுக்கொள்ள விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு சபையின் செயலாளரை இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment