தகுதி உள்ளவர்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள் - நிதி இராஜாங்க அமைச்சர்

 தகுதி உள்ளவர்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள் - நிதி இராஜாங்க அமைச்சர்

தகுதி உள்ளவர்கள் அனைவரும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள். கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல் பயனாளர் பெயர் பட்டியலுக்கு எதிராக நிறைவடைந்த 20 நாட்களுக்குள் மாத்திரம் 968,000 மேன்முறையீடுகளும், 17,500 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளாக இராஜாங்க அமைச்சர்; குறிப்பிட்டுள்ளார். 

சமுர்த்தி நலன்புரி திட்டத்துக்கு பதிலாக அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கு 33 இலட்ச பேர் விண்ணப்பித்த நிலையில் 22 இலட்சம் பேருக்கு குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் நிவாரண கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.

இதனடிப்படையில் ஆரம்பக்கட்ட 4 இலட்சம் குடும்ப பயனாளர்களுக்கு ஐந்து மாதகாலத்துக்கும், சமூக கட்டமைப்பில் அவதானம் நிலையில் உள்ள நான்கு இலட்ச குடும்பங்களுக்கு 08 மாத காலத்துக்கும், வறுமை நிலையில் உள்ள 08 இலட்ச குடும்பங்களுக்கும், அதி தீவிர வறுமை நிலையில் உள்ள 04 இலட்ச குடும்பங்களுக்கு 03 வருட காலத்துக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கபபட்டது.

அரசாங்க அரசாங்கத்தின் நலன்புரித் திட்டத்தின் கொள்கைக்கு அமைய இதுவரை காலமும் 16,55000 சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத மற்றும் வருட அடிப்படையில் நிவாரண நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. தற்போது அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் அந்த எண்ணிக்கை 12 இலட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல் கட்ட பயனாளர்களின் பெயர் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்டு மேன்முறையீடு மற்றும் முறைப்பாடளிப்பதற்கு 10 நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டது. புதிய பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் பிரதேச செயலகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டதால் மேன்முறையீடு செய்வதற்கான காலவகாசம் நேற்று முன்தினம் (10)ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

இதற்கமைய வழங்கப்பட்ட காலவகாசத்துக்குள் மாத்திரம் 968,000 மேன்முறையீடுகளும், 17,500 முறைப்பாடுகளும் கிடைக்பெற்றுள்ளதாகவும் இந்த மேன்முறையீடு, முறைப்பாடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக மீளாய்வு செய்யப்படும் எனவும் தகுதிவாய்ந்த தரப்பினர்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் கிடைக்கப் பெற்றுள்ள மேன்முறையீடு, முறைப்பாடு ஆகியன தொடர்பான இறுதி மதிப்பீட்டு தரப்படுத்தல் ஜனாதிபதியின் செயலருக்கு அனுப்பி வைக்கப்படும் என அஸ்வெசும நலன்புரித் திட்ட சபை குறிப்பிட்டுள்ளது.

Comments