சமுர்த்தி வங்கிகளில் கணனி மென்பொருள் வலையமைப்பை சீர் செய்வது தொடர்பான கருத்தரங்கு.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் 31 சமுர்த்தி வங்கிகளின் கணனி மென் பொருள் வலையமைப்பை சரியான முறையில் செயற்படுத்தும் பொருட்டு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியும், எதிர்கால சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பான பயிற்சி பட்டறை கருத்தரங்கு மாவட்ட செயலகத்தில் இன்று (22) மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இப்பயிற்சி திட்டமானது 22ம் மற்றும் 23ம் திகதிகளில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் சமுர்த்தி வங்கிச்சங்கம் சார்பாக சமுர்த்தி வங்கிச்சங்க முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கிச்சங்க உதவி முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கிச்சங்க நிறைவேற்றுக்குழு தலைவர்களும், சமுர்த்தி வங்கி சார்பாக சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச்சபை தலைவர்களும் பங்குபற்றி வருகின்றனர்.
இவர்களுக்கான கணனி தொடர்பான பயிற்சிகள் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள கணனி பயிற்சிமையத்தில் நேரடி பயிற்சி வழங்கப்படுவதுடன், கலந்துரையாடலும் இடம்பெற்று வருகின்றது.
இவர்களுக்கான விரிவுரைகளையும் பயிற்சிகளையும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணனி தொழில் நுட்ப உத்தியோகத்தர்களான த.சுரேஸ், ச.தங்கவேல், இ.கிருபாகரன், பொ.முருகேசு, ஆர்.லோகேஸ்வரன் ஆகியோரால் வழங்கப்படுகின்றது.
இப்பயிற்சி நெறி நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி வங்கிப்பிரிவு முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சிநெறியானது இலங்கை பூராவும் இன்றைய தினம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment