மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்: ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற எடுத்துள்ள அதிரடி முடிவு.
மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பெண்கள் உயர்தர பாடசாலையொன்றில் ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர் 29 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டுப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை இன்று (31) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மேலதிக நீதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.அன்வர் சாதாத் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை. சந்தேக நபர் தானே வழக்கைப்பேச அனுமதிக்குமாறு நீதிபதியைக்கோரிய போது சட்டத்தரணியை நியமிப்பதற்கு இரண்டுவார காலம் அவகாசம் வழங்கியுள்ளதனால் சந்தேகநபர் வழக்குப்பேச முடியாது என்றும் தேவையற்ற பேச்சுக்களுக்கு நீதிமன்றில் இடமளிக்கமுடியாது எனவும் நீதிபதி சந்தேக நபரை எச்சரித்தார்.
மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாணவிகள் பாலியல் துஷ்ப்பிரயோகத்திற்குட்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி நாகமணி சுசீலா இவ்வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றில் கதவுகள் மூடப்பட்ட நிலையில் மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை தினசரி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர்ப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வழக்கு விசாரணையினை அறிவதற்கென நீதிமன்ற வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கூடி நின்றனர். மாணவிகள் பாடசாலைச் சீருடையில் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். மாணவிகள் மற்றும் ஆசிரியைகளும் சந்தேகநபரைஅடையாளங்காட்டினர்.
Comments
Post a Comment