1980 இல் இயக்குனரான இவரை ஏன் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்ற ஐயம் எழுவது இயற்கை, காரணம் இவரை எந்த வரையறையில் வைப்பது என்ற குழப்பமே காரணம்.
கலைத்துறையில் கால் வைக்க நினைப்பவர்கள் ஒன்று இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என்ற மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு முயற்சிப்பதுதான் வழக்கம். ஆனால் இவர் அந்த மூன்றோடு கவிஞர், கதாசரியர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், பின்னணி பாடகர், எடிட்டர் போன்ற பல துறைகளிலும் கால் வைத்தவர். இவரிடம் இருந்த அதீத தன்னம்பிக்கையால் இதெல்லாம் சாத்தியமாயிற்று.
ஒரு தலைராகம் படம் அதுவரை தமிழ் திரையில் இருந்த கதையமைப்பு, காட்சி அமைப்பு, பாடல்கள், நடனம் போன்ற எல்லாவற்றிகும் ஒரு புது இலக்கணம் கொடுத்தது எனலாம். இதற்கு பிறகான கால கட்டங்களில் இதற்கு முன்பு இருந்த போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வந்தது இதுதான் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது என்று அடையாளபடுத்தும் அளவு மாறி போனது.
கல்லூரி மாணவர்களிடையேயான நட்பு, அதில் ஒரு காதல், அதுவும் ஒருதலைக்காதல் அதை சொல்ல முடியாத நாயகன், நாயகி பிறகு பொருந்தாத திருமணம் என்பது போன்ற ஓர் கதையமைப்பை அனைவரும் பின் பற்ற இவரது படம் ஒரு தொடக்க புள்ளியாக அமைந்தது. இத்தனைக்கும் ஒருதலை ராகத்தின் அதிகாரபூர்வ இயக்குனர் இவர் இல்லை, கதை, இசை மட்டுமே இவர் பெயர் வரும். ( சில பல விட்டு கொடுத்தல் காரணமாக ) அதை நிருபிப்பிதற்காவோ என்னவோ வசந்த அழைப்புகள், இரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஓர் ராகம் ஆகிய படங்களை சிறு சிறு மாற்றங்களோடு எடுத்தார்.
அதன் பின் தங்கைகோர் கீதம், உயிருள்ளவரை உஷா ஆகிய படங்கள் எடுக்கும் போது காதல் பின்னுக்கு தள்ளப்பட்டு, அது தங்கை பாசமாக மாற்றப்பட்டு எடுக்கப்பட்டது. இரண்டும் நல்ல வெற்றியுடன் பரவலாக அறியபட்டது .
ஆனால் அதன் பின் உறவை காத்த கிளி , மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி போன்ற தங்கை பாசம் படங்கள் வந்து பெரும் தோல்வியை தழுவியது. இதில் மைதிலி என்னை காதலி ஓரளவு ஓடியது காரணம் பாடல்கள், புதிய கதாநாயகி அமலா அறிமுகம் போன்றவை படத்துக்கு வலு சேர்த்தன .
மீண்டும் சிறிய இடைவெளி விட்டு காதலுக்கு திரும்பினார், மோனிஷா என் மோனலிசா, சொன்னால்தான் காதாலா, வீராசாமி என்று படங்களை எடுத்ததோடு படங்களில் முக்கிய காதபாத்திரத்திலும் நடித்தார்.
ஆனால் ஒரே போன்ற உடல்மொழி, உருக்கமான பாடல், வசனம், மிக குறைவான நடிப்பு என்று எந்த வேறுபாடும் படத்திற்கு படம் இல்லாமல் அலுப்பு தட்டியது இரட்டை குழந்தைகள் பிறந்தால் அதில் ஒரு குழந்தைக்கு உடல் குறை சிறிதளவேனும் இருக்கும் என்பது இயல்பு. காரணம் ஒன்று தான் முழுமையடைய முடியும் என்பதால். அது எட்டு ஒன்பது எனும் போது சிலது சவளை பிள்ளைகளாகத்தான் இருக்கும் என்பது இவரை பார்த்து புரிந்து கொள்ளலாம். இசையில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும், அதுவும் குறிப்பாக பாடல்களில் உள்ள கவிதைகள் மிக அருமையாக இருக்கும்.
பாடல்கள் இன்று ஒரே போல நிறைய பார்த்து விட்டதால் அலுப்பனாலும் அந்த காலத்தில் மிக பிரபலமாக இருந்தன. அதுவும் கல்லூரி விழாக்களில் தவறாமல் இடம் பெறும் பாட்டு ஆனந்த் பாபு நடனம் ஆடும் பாட்டு, சலிக்க சலிக்க அன்றைய இளைஞர்கள் மேடையில் இந்த பாட்டுக்கு நடனம் ஆடினார்
ஆனால் அதே சமயம் வசனங்கள் புளிக்கும் அளவு எதுகை மோனையோடு வந்து அதன் கவர்ச்சியை இழந்தது. காதல், தங்கை பாசத்தோடு இவரின் கற்பனை நின்று போனது சோகமே அதைக்கூட அதிக சினிமாத்தனம் இல்லாமல் இவரால் கொடுக்க இயலவில்லை, நூறு சதவிகிதம் கலையார்வம் கொண்ட ஒருவரால் ஒரு துறையில் கவனம் செலுத்த முடியாமல் அனைத்தையும் இழுத்து போட்டு கொண்டதால் அதன் தரம் குறைந்தது என்பது கண்கூடு.
இவரின் அனேகமான திரைப்படங்களின் பெயர்கள் 09 எழுத்துக்களை கொண்டதாக இருக்கும் அது ஏனோ தெரியவில்லை.
இவரால் அறிமுகபடுத்தப்பட்ட நளினி, ஜோதி, அமலா, ஜீவிதா மும்தாஜ் ஆகியோர் நல்ல வாய்ப்புகளை பெற்றனர். இவர் படத்தில் இடம்பெற்ற ரவீந்தர், ராஜிவ், வில்லன்களாகவும் குணசித்திர நடிகர்களாகவும் பிற்காலத்தில் அதிக படத்தில் தோன்றினர் .
இவர் மிக சிறந்த மனித நேயர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்
Comments
Post a Comment