'அஸ்வெசும' நடைமுறை சிக்கல்களால் வாய்ப்புகள் பறிபோகலாம்........

 'அஸ்வெசும' நடைமுறை சிக்கல்களால் வாய்ப்புகள் பறிபோகலாம்........

உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள 'அஸ்வெசும' நலன்புரி உதவித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மக்களின் உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது கோரப்பட்டுள்ளன. 

எனினும், இந்த திட்டம் புதிது என்பதால் மக்கள் மத்தியில் போதிய தெளிவின்மை ஏற்பட்டுள்ளதுடன் அரசியல் மட்டத்திலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

2002ஆம் ஆண்டு நலன்புரி அனுகூலங்கள் சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் நலன்புரி நன்மைகள் சபை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டு முதல் உத்தியோகபூர்வமாக பல்வேறு செயற்திட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. இருந்த போதிலும் நிர்வாக கட்டமைப்பில் இருந்த சில சிக்கல்கள் காரணமாக தற்காலிகமாக அதன் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 2022இல் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஓர் அங்கமே இந்த அஸ்வெசும நலன்புரி உதவித்திட்டமாகும். இதுவொரு குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டமாகும். 

குறிப்பாக இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள 22 இலட்சம் பேரில் தகுதியற்ற பலர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்பதே அனைவரதும் ஒருமித்த குரல். 

இந்த விமர்சனங்கள் தொடர்பில் ஆராய நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் கிரிதரனுடன் தொடர்புகொண்டு பல்வேறு விடயங்களை திரட்டியது.

மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை செய்யும் முறைமை :

மேற்படி திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் சபையின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.wbb.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த பெயர் பட்டியலுக்குள் விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்காவிடில் அல்லது மாற்றங்கள் காணப்படுமாயின் இந்த இணையத்தளத்தின் 'வீட்டு அலகு குறிப்பு எண்' என்பதற்குள் பிரவேசித்து கிராம சேவகர்களால் கொடுக்கப்பட்ட வீட்டு இலக்கத்தை அல்லது அடையாள அட்டை இலக்கத்தை கொடுத்து உள்நுழைய முடியும். அதில் QR முறையில் பதிவேற்றப்பட்ட தகவல்களை விண்ணப்பதாரர் பார்வையிட முடியும். அதில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது தவறுகள் இருப்பதாக கருதப்படும் பட்சத்தில் விண்ணப்பதாரரே சரியான மாற்றங்களை செய்துகொள்ள முடியும். உதாரணமாக, மாதாந்த வருமானம் 35,000 என பதிவேற்றப்பட்டிருந்தால் உண்மைத்தொகையை மாற்றலாம். அப்படி இல்லாத பட்சத்தில் விண்ணப்பதாரர் நேரடியாக பிரதேச செயலகத்துக்குச் சென்று அங்கு இதற்கென பிரத்தியேகமாக உள்ள அதிகாரிகள் ஊடாக திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதற்கு ஆதாரமாக பிரதியை பெற்றுக்கொள்ளவும் முடியும். 

ஆட்சேபனை என்பது இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள நபர்களின் யாரேனும் ஒருவர் தகுதியற்றவராக கருதப்படும் பட்சத்தில் இது தொடர்பில் தமது ஆட்சேபனையை இணையத்தளத்திலோ அல்லது பிரதேச செயலக அதிகாரிகளிடமோ கடிதம் மூலமாக முன்வைக்க முடியும். இதில் இணையத்தின் ஊடாக தெரிவிப்பதாயின் ஆட்சேபனை தெரிவிப்பவர் முதலில் தனது தனிப்பட்ட தகவல்களை பதிவேற்றம் செய்த பின்னரே குறித்த தகுதியற்ற நபரின் விபரங்களை உள்ளடக்கலாம். 

பொருளாதாரம் என்பதற்குள் எதற்காக மின்சாரக் கட்டணம்?:

விண்ணப்பதாரர்களிடம் பிரதானமாக 6 விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளால் தகவல் கோரப்பட்டது. அதாவது விண்ணப்பதாரரின் குடும்பம், கல்வி மட்டம், சுகாதாரம், வருமானம், சொத்து, வீட்டின் அமைப்பு என்பனவாகும். இவற்றில் பொருளாதாரம் என்பதற்குள் மாதாந்த வருமானம், செலவீனம் தொடர்பில் ஆராயப்பட்ட அதேவேளை மின் கட்டணமும் நீர் கட்டணமும் ஆராயப்பட்டுள்ளது. இதில் மின் கட்டண அலகு ஆகக் குறைந்தது 60 அலகுகளுக்கு கீழ் பயன்படுத்தும் நபரொருவர் வறுமையானவராக கருதப்படுகிறார். ஒருவரது மாதாந்த வருமானத்தில் தங்கி வாழும் குடும்ப அங்கத்தவர்களது எண்ணிக்கையை கொண்டு விண்ணப்பதாரரது செலவீனம் கணிப்பிடப்பட்டுள்ளது. சொத்து என்பதற்குள் விண்ணப்பதாரரிடம் இரு ஆடுகள் காணப்பட்டால் அது அவரது கால்நடை சொத்தாக பார்க்கப்பட்டுள்ளது. 

நலன்புரி நன்மைகள் சபையின் அடுத்தகட்ட நடவடிக்கை:

இதுவரை 821,390 மேன்முறையீடுகளும் 11,098 ஆட்சேபனைகளும் (7ஆம் திகதி வரை) கிடைக்கப்பெற்றுள்ளன. எதிர்வரும் 10ஆம் திகதியுடன் மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான இறுதித் திகதி முடிவடைந்த பின்னர் மாவட்ட செயலாளர் தலைமையில் பிரதேச சபை அதிகாரி உட்பட 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு மேன்முறையீடுகள் தொடர்பில் ஆராயப்படும்.

இதில் பிரதானமாக 3 விடயங்களை இந்த குழு தீர்மானிக்கும். அதாவது மேன்முறையீடு செய்த விண்ணப்பதாரரின் தகவலின்படி அவர் தகுதியற்றவர் என கருதப்பட்டால் மீண்டும் அந்நபர் நீக்கப்படுவார். அதேவேளை தகுதி இருந்தும் நீக்கப்பட்டிருந்தால் அவர் இணைத்துக்கொள்ளப்படுவார். இவ்விரண்டு விடயங்களும் ஆராயப்பட்ட பின்னர் புதிதாக தகுதி பெற்றவர்கள் தொடர்பில் மீள் எண்ணீடு செய்யப்படும்.

நிவாரண கொடுப்பனவுக்கு தகுதி பெறவுள்ளோர்:

இந்த நிவாரணத்திட்டத்துக்கு 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் முதற்கட்டமாக 22 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபை ஆரம்பத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மேன்முறையீடுகள் ஆராயப்பட்டு தகுதியானவர்கள் மேலும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்ற விடயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் மேன்முறையீடுகள் தொடர்பில் ஆராயப்பட்ட பின்னரும் இந்த முதற்கட்ட நிவாரணத்துக்கு 22 இலட்சம் பேர் மாத்திரமே தெரிவு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தற்போது அறிவித்துள்ளது. அதில் 2 இலட்சம் பேர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவாறு சிறுநீரக நோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலவே 22 இலட்சம் பேர் தகுதி பெற்றதாக எழுமாறாகவே இந்த சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் விசேட தேவையுடையவர்கள், நோயாளர்கள் மற்றும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் இன்னும் தயார்ப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம், ஏற்கனவே மேற்படி தரப்பினருக்கு அரசாங்கத்தினால் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த பெயர் பட்டியலோடு புதிதாக அஸ்வெசும திட்டத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் பெயர்களும் தயார் செய்யப்பட்டு இனிவரும் காலங்களில் வறுமை கொடுப்பனவுகள் யாவும் நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாகவே வழங்கப்படும் என்ற விடயத்தை மேற்படி சபை தெரிவித்துள்ளது. 

இலங்கையில் 17 இலட்சத்து 6 ஆயிரத்து 700 குடும்பங்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகையினரில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.  இந்நிலையில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வறுமை கொடுப்பனவுகள் யாவும் இனிமேல் நலன்புரி நன்மைகள் சபையின் கீழ் முன்னெடுக்கப்படுமாயின் சமுர்த்தி பயனாளிகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான ஒரு பொறிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். 

அதேவேளை இந்த அஸ்வெசும திட்டத்தின் மேன்முறையீட்டு முறைமை எந்தளவு சாத்தியம் என்பது சற்று கலக்கமாகவே உள்ளது. 

விண்ணப்பதாரர் தனது விபரங்களை சுயமாக மாற்றீடு செய்யும் போது தனக்கேற்றாற்போன்று தரவுகளை பதிவேற்றலாம். அதேநேரம் மீள் எண்ணீடு செய்யப்படும்போது அதற்கேற்ற சூழலை போலியாக மாற்றிக்கொள்ள முடியும். எனவே, இந்த பொறிமுறையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதை விரும்பியோ விரும்பாமலோ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் தர்க்கமாக உள்ளது.

எனவே இந்த நிவாரண கொடுப்பனவுக்காக  பயன்படுத்தப்பட்டுள்ள பொறிமுறையில் உள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவற்றை திருத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற சவாலான பொறிமுறைகளால் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப்பெறும் ஏனைய வாய்ப்புகள் கூட இல்லாமல்போகும் சந்தர்ப்பம் வெகு தொலைவில் இல்லை.

Comments