பட்டிருப்பு கல்வி வலயத்தின் 2023ம் ஆண்டுக்கான தமிழ்மொழித்தின போட்டி நிகழ்வு....
பட்டிருப்பு கல்வி வலயத்தின் 2023ம் ஆண்டுக்கான வலய மட்ட தமிழ்மொழித்தின போட்டிகள் (22) மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் தமிழ் பாடத்துறைக்கான உதவிக்கல்விப் பணிப்பாளரும் வலய தமிழ்மொழி தின போட்டிகளுக்கான இணைப்புச் செயலாளருமாகிய ந.நேசகஜேந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சி.சிறீதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தரை கௌரவிக்கும் வகையில் இலங்கை கல்வி அமைச்சானது தங்களது ஆளுகைக்கு உட்பட்ட அரச பாடசாலை மாணவர்களிடையே அகில இலங்கை தமிழ்மொழித்தின போட்டிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது. கல்வி அமைச்சின் தமிழ் மொழித்தின சுற்று நிரூபத்தை பின்பற்றி இவ் வருடம் பட்டிருப்பு கல்வி வலயமும் சிறந்த திட்டமிடலுடன் தமிழ் மொழித்தின போட்டிகளை நடார்த்திக்கொண்டிருக்கிறது. அண்மையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்விக்கோட்டங்களான மண்முனை தென் எருவில் பற்று கோட்டம் மற்றும் வெல்லாவெளி கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் கோட்டமட்ட தமிழ்மொழித்தின போட்டிகள் இடம்பெற்று இன்றைய தினம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலய மட்ட தமிழ்மொழித்தின போட்டிகள் இடம்பெற்றிருந்தது.
தமிழ் மொழித்தினத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த பிரமுகர்கள் தமிழர் பண்பாட்டு நடனங்கள் மற்றும் தமிழர் பண்பாட்டு இசைவாத்தியங்களின் இசை முழக்கத்தின் மத்தியில் நிகழ்வுகளின் பிரதான மண்டபத்துக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டதுடன், தமிழ்மொழித்தின நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு பல போட்டிப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உரையாற்றிய வலயக்கல்வி பணிப்பாளர் அவர்கள் முத்தமிழ் வித்தகரின் தமிழ்த் தொண்டினை தொட்டுச்சென்றதுடன் தமிழ் பாரம்பரியத்தினது தோற்றமும், பிற்கால படிமுறை வளர்ச்சியும், அன்பின் பிறமொழி ஊடுருவலால் தமிழ் மொழியின் தற்கால நிலை பற்றியும் தமிழ் மொழியை பேணிப்பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பற்றியும் விரிவான விளக்கங்களுடன் கூடிய தன் தலைமையுரையினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் வலயத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment