வாவிக்கரையோரங்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு .....
தேசிய சுற்றாடல் வாரத்தின் இறுதி நாளும் உலக சுற்றாடல் தினமுமான (ஜூன் 5) காத்தான்குடி பிரதேச சுற்றாடல் முன்னோடி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றும் சுற்றாடல் விழிப்புணர்வு ஊர்வலம் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றது.
"காத்தான்குடி வாவிக்கரையோரத்தினை அண்மித்துக் காணப்படும் வீதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்போம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்வூர்வலம் காத்தான்குடி வாவிக்கரை வீதியின் தெற்கிலிருந்து, மட்டக்களப்பு நகர் நோக்கி காத்தான்குடி பழைய கல்முனை வீதி ஊடாக சென்று காத்தான்குடி மஸ்ஜித் குபா பள்ளி வாயலை சென்றடைந்தது.
இவ்வூர்வலத்தில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மற்றும் ஆரையம்பதி மாவிலங்கைத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவிகள் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் விளைவுகளை தெளிவூட்டுவதுடன் பாதுகாப்பு பெறும் வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்.
இம்மாணவிகளில் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டம் என்பதன் கீழ் தரம் ஆறிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு தரத்திலும் தமது சுற்றாடலுக்கான பங்களிப்புக்கான பதக்கங்களைப் பெற்று, சுற்றாடல் தொடர்பாக ஜனாதிபதி பதக்கம் பெறுவதற்குக் காத்திருப்பவர்கள் எட்டு மாணவிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment