மட்டக்களப்பு வாவியில் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் சேராது வாவியைப் பாதுகாப்பதற்கு பிரதேச மக்களை அவற்றின் பாவனையிலிருந்து விடுபட விழிப்பூட்டல்....

 மட்டக்களப்பு வாவியில் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் சேராது வாவியைப் பாதுகாப்பதற்கு பிரதேச மக்களை அவற்றின் பாவனையிலிருந்து விடுபட விழிப்பூட்டல்....

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் வழிகாட்டலில் தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு பிரதேசத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுற்றாடல் அதிகாரி ரஜனி பாஸ்கரனின் ஆலோசனைக்கு இணங்க கடந்த சனிக்கிழமை (03) இடம்பெற்றன.
இதன் போது தேசிய சுற்றாடல் வாரத்தின், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொனிப் பொருளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு ஏற்ப, "நீர் மற்றும் நீர் மூலாதரங்களைப் பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளின் கீழ், ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவின் காங்கேயேனோடைப் பிரதேசத்தின் மட்டக்களப்பு வாவிப் பகுதி பொலிதீன் பிளாஸ்டிக் கழிவுகள் பாரியளவில் தேங்கிக் காணப்படும் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டு, அக்கழிவுகள் அகற்றப்பட்டன.
இக்கழிவுகள் மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மக்களுக்கு இப்பொலித்தீன், பிளாஸ்டிக் பயன்பாட்டின் போது ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டியதுடன் தொடர்ந்தும் வாவியில் கழிவுகள் சேராது, வாவி மற்றும் அதன் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு பிரதேச மக்களை பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையிலிருந்து விடுபடச் செய்வதே தமது நோக்கம் என பிராந்திய சுற்றாடல் அதிகாரி ரஜனி பாஸ்கரன் தெரிவித்தார்.
இச்சிரமதான செயற்பாட்டிற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட அதிகாரிகள், பிரதேச அபிவிருத்தி மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




Comments