விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளாய்வு கலந்துரையாடல்.....
விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் காலமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (14) இடம்பெற்றது
இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல், கண்கானித்தல்,மதிப்பிடுதல் மற்றும் அறிக்கையிடுதல் குறித்த விரிவாக ஆராயப்பட்டது
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருக்கு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தியினால் முன்னளிக்கை செய்யப்பட்டது.
மாவட்டத்தின் பிரதான உற்பத்தித் துறைகளான விவசாயம், கால்நடை வளர்ப்பு, உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தியதுடன் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
நெல்லுக்கான நிர்ணய விலை தாமதமாக நிர்ணயிக்கப்படுதல் மற்றும் நெல்லினை உலரவிடும் இயந்திரம் இன்மையினால் பருவ பெயர்ச்சிக்காலத்தில் விவசாயிகள் எதிர் நோக்கும் நிலைப்பாடுகள் போன்ற விடயங்கள் அரசாங்க அதிபரினால் அமைச்சரின் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டது.
களுதாவளையில் அமைந்துள்ள மத்திய பொருளாதார நிலையத்தின் தொழிற்பாட்டை செயற்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கையினை எடுத்தல், கரடியனாற்றில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தினை மேம்படுத்தல், மாவட்டத்தில் கைவிடப்பட்ட சிறிய குளங்களை மீள் புனரமைத்தல், நவீன தொழில் நுட்ப உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்கல், விதை சேமிப்பு களஞ்சியம் மற்றும் நெல் சந்தைப் படுத்தல் பிராந்திய காரியாலயத்தினை மாவட்டத்தில் அமைத்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள் அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த. தஜீவரன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், அமைச்சின் பிரதான கணக்காளர், பிரதேச செயலாளர், திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், உயரதிகாரிகள்,மாவட்ட விவசாய பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment