காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டம்.....
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் (06) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர், தற்போதைய காலநிலை மாற்றத்தினால் டெங்கு நோயின் தீவிரத்தன்மை குறைவடைந்த போதிலும் முற்றாக டெங்கு நுளம்பின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை.
காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை என்ற நிலை வரும் வரை பிரதேச சுகாதார அதிகாரி அலுவகம், நகர சபை, பொலிஸ், பிரதேச செயலகம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமெனவும், டெங்கு பரவும் ஆபத்தான இடங்கள், வீடுகள், நீர் தேங்கும் இடங்கள், என்பவற்றை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலைகளில் டெங்கு சிரமதானம், மாணவர்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்புணர்வூட்டல், பாடசாலைகளில் டெங்கிற்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவரை நியமித்தல், விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து டெங்கினை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்தார்.
திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை திறம்பட செய்ய பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல விரிவுரைகள் செய்ய வேண்டிய தேவை பற்றியும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதற்கு பிரதேச செயலகம், நகரசபை, பொலிஸ் ஆகியன முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் மேற்படி திட்டங்களை பாடசாலை ஆரம்பமான பின்னர் நடைமுறைப் படுத்தபட விருப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் முதற் கட்டமாக வீடுகளை நேரடியாகப் பார்வையிட்டு, கள நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான செயற்திட்டமும் தயாரிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி நகரசபை செயலாளர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர், பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment