கிழக்கில் 10 திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது: தங்க நகைகள், கைப்பேசிகள், மடிகணினி, மோட்டார் சைக்கிள் மீட்பு...
கிழக்கில் 10 திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது: தங்க நகைகள், கைப்பேசிகள், மடிகணினி, மோட்டார் சைக்கிள் மீட்பு...
மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை உட்பட பல பிரதேசங்களில் வீடுகளை உடைத்து பொருட்களை திருடுவது, மோட்டார் சைக்கிள் திருடுவது என 10 திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய பிரதான சூத்திரதாரி ஒருவரை கிளிநொச்சியில் வைத்து (17) அன்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அத்தோடு திருடப்பட்ட தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசிகள், மடிகணினி, மோட்டார் சைக்கிள் என்பன சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றியதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் வீடுகளை உடைத்து பொருட்கள் திருடப்படுவது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையிலேயே பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அந்த நபர் மறைந்திருந்த இடம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் ஆலோசனைக்கமைய, பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று கிளிநோச்சி பகுதியில் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
அதன் பின்னர், கைதான நபரை விசாரணைக்கு உட்படுத்தியபோது, அவர் திருகோணமலை நிலாவெளியை சேர்ந்த 29 வயதுடையவர் என்பதும் கிளிநொச்சியில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும்இ ஆரம்பகட்ட விசாரணையினூடாக தெரியவருவதாவது:
சந்தேக நபர் திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் 5 மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார்.
அதுமட்டுமன்றி, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை, பாரதி லேன், கதிர்காமர் வீதி ஆகியவற்றில் அமைந்துள்ள 5 வீடுகளை உடைத்து, தங்க ஆபரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசி, மடிகணினி போன்றவற்றையும் திருடியுள்ளார்.
அத்தோடு, மோட்டார் சைக்கிளில் சென்று மட்டக்களப்பு ஜீவி வைத்தியசாலை பகுதியில் வைத்து வீதியால் சென்ற பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இவ்வாறாக 10 திருட்டுச் சம்பவங்களில் இந்த நபர் ஈடுபட்டுள்ளதாகவும், திருடிய தங்க ஆபரணங்களை விற்று, கெப் வாகனமொன்றை வாங்கியுள்ளதாகவும் விசாரணையின் போது சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, கைதானவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், மடிகணினி, 7 கையடக்க தொலைபேசிகள் மற்றும் உருக்கிய நிலையில் ஒரு தொகை தங்கம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த நபர் திருடிய பணத்தில் வாங்கிய கெப் வாகனத்தை மீட்பதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில்இ சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Comments
Post a Comment