இலங்கை U23 அபிவிருத்தி குழாத்தில் இடம்பிடித்த தீசன் விதுசன்....

 இலங்கை U23 அபிவிருத்தி குழாத்தில் இடம்பிடித்த தீசன் விதுசன்....

ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை 23 வயதின்கீழ் அபிவிருத்தி கிரிக்கெட் குழாத்தில் யாழ்ப்பாண வீரர் தீசன் விதுசன் இடம்பிடித்துள்ளார்.

ஜப்பான் கிரிக்கெட் சபையின் அழைப்பின் படி இலங்கை கிரிக்கெட்டின் 23 வயதுக்குட்பட்ட அபிவிருத்தி குழாம் ஒன்று இம்மாதம் ஜப்பானுக்கு பயணித்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

குறித்த இந்த தொடருக்கான இலங்கை அபிவிருத்தி குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இதில் யாழ். மத்தியக் கல்லூரியின் முன்னாள் வீரரும் மூவர்ஸ் கிரிக்கெட் கழகத்தின் சுழல் பந்துவீச்சாளருமான தீசன் விதுசன் அணியில் இடம்பிடித்துள்ளார்.

தீசன் விதுசன் மூவர்ஸ் கிரிக்கெட் கழக அணிக்காக 8 முதற்தர போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளை சாய்த்து தனது திறமையை நிரூபித்துள்ள நிலையில், இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

இவருடன் உள்ளூர் 23 வயதின்கீழ் கழக மட்ட போட்டிகளில் பிரகாசித்த பல முன்னணி வீரர்கள் இந்த குழாத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடரில் முன்னணி கழக 23 வயதின் கீழ் தொடரில் பிரகாசித்து, தேசிய சுபர் லீக்கில் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை 23 வயதின் கீழ் அபிவிருத்தி குழாம்:

சகுன லியனகே, துனித் ஜயதுங்க, சஹில் டயஸ், ரன்மித் ஜயசேன, செஹான் பெர்னாண்டோ, யொஹான் லியனகே, ஹிரந்த ஜயசிங்க, சித்தார அபுஹின்ன, டெலோன் பீரிஸ், லக்ஷான் கமகே, தீசன் விதுசன், இம்தியாஷ் ஷ்லாஷா, சிதும் திசாநாயக்க, ஹர்ஷன விக்மரசிங்க, தனால் ஹேமந்த

மேற்குறித்த குழாமானது இலங்கை கிரிக்கெட் சபையினால் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments