வாகனேரியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு......
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாகனேரி சுற்றுலா விடுதி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான க.ஜெயந்தன் வயது (24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை மாலை (3) வழக்கம் போல் மாடு கட்டும் தொழிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வீட்டில் அருகாமையில் நின்ற யானையே இவரை தாக்கியுள்ளது. தாக்குதலுக்காப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வாழைச்சேனை பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி வ.இரமேஸ் ஆனந்தன் ஆகியோர்கள் சடலத்தை பார்வையிட்டனர். இதன் போது காட்டு யானையின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்து பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் கடந்த 3 நாட்களுக்கு முன்பும் வீதியால் சென்ற நபர் ஒருவரை துரத்தி துரத்தி தாக்கியதாகவும் அதிஸ்டவசமாக அவர் யானையின் தாக்குதலில் இருந்து உயிர்தப்பியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே யானை வேலி அமைத்து பாதுகாப்பு பெற நடவடிக்கை எடுத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொதுமக்கள் கேட்கின்றனர்.
Comments
Post a Comment