மயிலம்பாவெளியில் உதவும் கரங்கள் இல்லத்தினால் பாலர் பாடசாலை திறந்து வைப்பு......
சுவாமி விபுலானந்தரின் 131 வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் 'வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்' எனும் கருப்பொருளில் உதவும் கரங்கள் இல்லம் முன்னெடுத்து வரும் சிறுவர்களுக்கான செயல்திட்டத்தின் கீழ், 2023 ஆம் ஆண்டுக்கான திட்டமாக பாலர் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் எஸ்.ஜெயராஜ் தலைமையில் பாலர் பாடசாலை திறப்பு விழா இடம்பெற்றது. இன்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் சுவாமி நீல மாதவானந்தா ஜீ மகராஜ் சுவாமிகளும், பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவும் கலந்து கொண்டனர்.
உதவும் கரங்கள் அமைப்பிற்கான இணையதளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதோடு, பாலர் பாடசாலை சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் பேராசிரியர் செல்வராஜா, சுவாமி விபுலானந்த நூற்றாண்டு விழா சபை தலைவர் கே.பாஸ்கரன், கிழக்கு பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் பிரேம்குமார், உதவும் கரங்கள் செயலாளர் எ.முகுந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment